மகாதீர் – அன்வார் அவதூறு வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை டிசம்பர் 4ஆம் தேதி அறிவிப்பு

top-news

ஷா ஆலம், அக் 27: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தொடர்ந்த 15 கோடி ரிங்கிட் அவதூறு வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4ஆம் தேதி உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் மகாதீரின் தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, வழக்கை எவ்வாறு தொடர்வது என்பதை முடிவு செய்ய அவருக்கு அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாக அவரது வழக்கறிஞர் முகமட் ரஃபீக் ரஷித் அலி தெரிவித்தார்.

டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும் வழக்கு நிர்வாக விசாரணையின்போது, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கை நீதித்துறை ஆணையர் டத்தோ டொனால்ட் ஜோசப் பிராங்க்ளின் விசாரித்து வருகிறார்.

டாக்டர் மகாதீரின் வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கும் திறன், உடல் சகிப்புத்தன்மை மற்றும் வசதி குறித்து தாம் கவலை தெரிவித்துள்ளதாகவும் ரஃபீக் கூறினார்.

விசாரணையை இணையவழியில் நடத்துவது மற்றும் எதிர்தரப்பு குறுக்கு விசாரணையின் வரம்பைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பரிசீலித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற எஸ்ஜி4 வர்த்தக மற்றும் பொருளாதார மன்றத்தில் டாக்டர் மகாதீர் பங்கேற்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் அவர் கீழே விழுந்து காயமடைந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த வழக்கில், தாம் 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் இனவாதியாகச் செயல்பட்டதாகவும், தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் செல்வம் சேர்த்ததாகவும் அன்வார் குற்றம்சாட்டியதன் மூலம் தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக மகாதீர் கூறியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி, ஷா ஆலமில் உள்ள மெலாவத்தி விளையாட்டரங்கில் நடைபெற்ற பிகேஆர் சிறப்பு தேசிய மாநாட்டில் அன்வார் ஆற்றிய உரையின்போது இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், தண்டனை நோக்கிலான இழப்பீடாக 10 கோடி ரிங்கிட்டும், பொதுவான இழப்பீடாக 5 கோடி ரிங்கிட்டும் வழங்க வேண்டும் என மகாதீர் கோரியுள்ளார். மேலும், எழுத்துப்பூர்வ மன்னிப்பும், தமது கருத்துகளுக்காக அன்வார் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் வகையில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்