நான் துரோகி என்றால், வான் அஸிஸாவும் துரோகிதான்-அன்வாருக்கு மகாதீர் பதிலடி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, டிச. 11-

பத்து பூத்தே விவகாரத்தைக் கையாண்ட விதத்தைக் குறைகூறியிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை டாக்டர் மகாதீர் முகமது கடுமையாகச் சாடியுள்ளார்.அந்த விவகாரம் தொடர்பான முடிவுகள் அமைச்சரவையினால் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகும். அப்போதைய அமைச்சரவையில் அன்வாரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் இடம்பெற்றிருந்தார் என்று அவர் சுட்டிக் காட்டினார். இதனைப் பார்க்குமிடத்து, தம்முடைய நடவடிக்கைகளை எவ்வாறு துரோகச் செயலாகக் கருத முடியும் என்று மகாதீர் வினவினார்.

நான் துரோகி என்றால் அப்போது என்னுடைய துணைப் பிரதமராக இருந்த வான் அஸிஸாவும் துரோகிதான் என்று புத்ராஜெயாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் சொன்னார்.பத்து பூத்தே, மிடில் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவற்றின் இறையாண்மை தொடர்பான சர்ச்சை குறித்து அரச விசாரணைக்குழு அண்மையில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது.அப்போதைய மகாதீர் தலைமையிலான அரசாங்கம் மலேசியாவுக்குத் துரோகம் புரிந்துள்ளது என்பதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது என்று அன்வார் கூறியிருந்தார். அது பற்றி மகாதீர் நேற்று கருத்துரைத்தார்.

பத்து பூத்தே விவகாரத்தில் தற்போது காட்டப்பட்டுவரும் திடீர் ஆர்வம், அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது கௌரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும் என்று மகாதீர் கூறினார்.என்னை ஒழிக்க வேண்டும் என்பதே இதன் ஒட்டுமொத்த நோக்கமாகும். சிங்கப்பூருக்கு எதிரான எனது நிலைப்பாடு இதற்கு காரணமாக இருக்கலாம். நாங்கள் சிங்கப்பூருக்காக எதனையும் விட்டுக் கொடுப்பதில்லை என்றார் மகாதீர்.

ஜொகூருக்கு அருகில் உள்ள பத்து பூத்தே தீவு சிங்கப்பூருக்கே சொந்தம் என்று கடந்த 2008ஆம் ஆண்டில் அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனை எதிர்த்து, முந்தைய நஜிப்பின் அரசாங்கம் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனுவை அனைத்துலக நீதிமன்றம் விசாரிக்கவிருந்த வேளையில், அதனை மகாதீரின் அரசாங்கம் திடீரென்று மீட்டுக் கொண்டது.

அந்த சீராய்வு மனு என்ன காரணத்தால் மீட்கப்பட்டது என்பதை கண்டறிய அரச விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. மகாதீர் மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்குழு அண்மையில் பரிந்துரைத்திருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *