மாநிலங்களவை எம்.பி. வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்: அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு
- Surendran Sumdraraj
- 01 Jun, 2026
சென்னை, ஜூன் 1-
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஜூன் 1) ஆரம்பமாகி, ஜூன் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், மைலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதால் இந்த இடம் காலியாகியது.
தமிழக சட்டப்பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இந்த இடத்தை எளிதாகக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதனால், தவெக சார்பில் மாநிலங்களவைக்கு யார் அனுப்பப்படுவார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரை தேர்வு செய்வாரா அல்லது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு இந்த வாய்ப்பை வழங்குவாரா என்பது குறித்தும் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் தரப்பும் மாநிலங்களவை இடம் கோரி தவெக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



