முகமட் ஈசா சமாட்டின் ‘தான் ஶ்ரீ’ பட்டம் திரும்பப் பெறப்பட்டது
- Surendran Sumdraraj
- 11 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 11 –
முன்னாள் அரசியல்வாதி டத்தோ முகமட் ஈசா சமாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த PSM விருதும், அதனுடன் தொடர்புடைய ‘தான் ஶ்ரீ’ பட்டமும் கடந்த ஜூன் 8 முதல் அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகப் பிரதமர் துறை இன்று அறிவித்துள்ளது.
பிரதமர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்றதுடன் தற்போது சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், இந்த நடவடிக்கைக்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மலேசியாவின் “Darjah Yang Mulia Setia Mahkota Malaysia” சட்டவிதிகளின் XXV மற்றும் XXV(A) பிரிவுகளின்படி, குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களிடமிருந்து விருதுகளையும் பட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான அதிகாரம் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024 செப்டம்பர் 7-ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற கூட்டாட்சி விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர்களின் கௌரவப் பட்டங்களை மீளாய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் வழங்கியிருந்த அரச உத்தரவின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முகமட் ஈசா சமாட் தொடர்பான இந்த நடவடிக்கை, நாட்டின் கௌரவ விருதுகளின் மதிப்பையும் மரியாதையையும் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

