மேற்கு ஆசிய போர் பதற்றம் – பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா F1 போட்டிகள் ரத்து
- Surendran Sumdraraj
- 15 Mar, 2026
பாரிஸ், மார்ச் 15-
மேற்கு ஆசியாவில் ஈரான் தொடர்பாக உருவான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் நடைபெறவிருந்த பார்முலா ஒன் (F1) கார் பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உலக மோட்டார் விளையாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
உலக மோட்டார் விளையாட்டு நிர்வாக அமைப்பான சர்வதேச மோட்டார் வாகன கூட்டமைப்பு (FIA) வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “மத்திய கிழக்கில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான மதிப்பீட்டின் பின்னர், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் சவுதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் நடைபெறாது என்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் இந்த பருவத்தின் நான்காவது போட்டியாக ஏப்ரல் 10 முதல் 12 வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு சவுதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸ் நடைபெற இருந்தது.
ஆனால் தற்போது மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, வீரர்கள், அணிகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டு போட்டிகளையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக FIA தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



