ஓன் ஹபீஸ் ஒரு தலையாட்டி பொம்மை! நான் அம்னோவிலிருந்து விலகுகிறேன்! புவாட் சர்காசி ஆவேசம்
- Shan Siva
- 25 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 25: ஜொகூர் அம்னோ கட்சியில் முடிவெடுப்பதில் தன்னாட்சி இல்லாத நிலை குறித்து இனிமேலும் மௌனம் காக்க முடியாது என்று கூறி, அம்னோ கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி இன்று கட்சியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்.
கடுமையான வார்த்தைகளில் வெளியிட்ட அறிக்கையில், புவாட், தான் எந்த மனவருத்தமும் இல்லாமல் கட்சியை விட்டு வெளியேறுவதாகவும், இனி கட்சியின் கருத்துகளுக்கு மாறாகப் பேசும் போதெல்லாம் தன்னை கட்சித் துரோகி என்று குற்றம் சாட்டப்படுவதிலிருந்து விடுபடலாம் என்றும் தெரிவித்தார்.
இப்போது மலாய்காரர்களுக்கும், மலேசியர்களுக்கும் முக்கியமான ஒரு தளமாக தாம் இன்னும் மதித்து நேசிக்கும்
அம்னோவை விமர்சிக்க எனக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று
அவர் கூறினார்.
தனது முடிவு தனிப்பட்ட சுயநலத்தால்
எடுக்கப்பட்டதல்ல என்றும், கைரி ஜமாலுடின், ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் நோ ஓமார் போன்ற முக்கிய தலைவர்கள் மீண்டும்
கட்சியில் இணைவதன் மூலம் அம்னோ மீண்டும் வலுப்பெற்று வருகிறது என்று கருதப்படும்
நேரத்தில்தான் தாம் வெளியேறுவதாகவும் புவாட் சுட்டிக்காட்டினார்.
ஜொகூர் அம்னோ சுயாதீனமாக
முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், இதை ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹபிஸ் காசி தன்னிடம்
ஒப்புக்கொண்டதாகவும் முன்னாள் பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினரான புவாட்
குற்றம்சாட்டினார்.
ஓன் ஹபிஸ் வெறும் 'ஆம்' என்று தலையாட்டும்
நபராக மட்டுமே செயல்படுகிறார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதனால் ஜொகூர் அம்னோ
வெளிப்புற கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொம்மையாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பு
தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக தமக்கு அரசியல் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது முடிவு விமர்சனங்களையும், தனது பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்ட புவாட், அதன் விளைவுகளை எதிர்கொள்ளத்
தயாராக இருப்பதாகக் கூறினார்.
பாரிசான் வேட்பாளர்கள் பழைய
முகங்கள், ஊக்கமற்றவர்கள், சராசரி திறனுடையவர்கள் என்று கேலி செய்யப்படும் நிலையை உருவாக்கும் 'அரசியல் கோழைகள்' அம்னோவை வழிநடத்துவதை
நான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக அவர் குறிப்பிட்ட ஒரு நாளுக்குப் பிறகே அம்னோவிலிருந்து அவரது ராஜினாமா வந்துள்ளது. அப்போது, மாநில அம்னோவில் சில விஷயங்கள் சரியாக இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



