ஹலால்” முத்திரை துஷ்பிரயோகம் -ஷேக் அண்ட் கேக் நிறுவன அதிகாரி குற்றச்சாட்டு!
- Muthu Kumar
- 25 Jan, 2025
பெட்டாலிங் ஜெயா, ஜன. 25-
கேகே மார்ட் விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்ட "சாண்ட்விச்” ரொட்டிகளில் முறைகேடான “ஹலால்" முத்திரைகளைப் பதித்த விவகாரம் தொடர்பில் ஷேக் அண்ட் பேக் பெர்ஹாட் நிறுவனத்தின் மீதும் அதன் நிர்வாக இயக்குநர் ஈவ் சார்ன் யுவென் மீதும் நேற்றுத் தனியாக குற்றம் சுமத்தப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் சுமத்தப்பட்ட ஆறு குற்றங்களையும் கோப்பெங் மசீச தலைவருமான சார்ன் யுவென் மறுத்தார்.2011ஆம் ஆண்டு வர்த்தக விளக்கவியல் உத்தரவு (ஹலால் விளக்கம்) சட்டத்தின் 41 ஆவது பிரிவின்கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அந்நிறுவனம் அனுப்பிய 366 சாண்ட்விச் ரொட்டிகள்“ஹலால்” ரொட்டிகள் என்று மக்களை ஏமாற்றும் விதமாக அதில் "ஹலால்" முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐம்பது கலவை தூனா சாண்ட்விச்சுகள், 43 கலவை உருளைக் கிழங்கு சாண்ட்விச்சுகள், 77 கலவை கோழி இறைச்சி சாண்ட்விச்சுகள், 74 முட்டை மாயோ சாண்ட்விச்சுகள், 66 ஹாம் சாண்ட்விச்சுகள், 56 சில்லி கிராப் ஸ்டிக் சாண்ட்விச்சுகள் போன்றவை அவற்றில் அடங்கும்.
இம்மாதம் 10ஆம் தேதியன்று சன்வே டாமன்சாராவில் உள்ள ஷேக் அண்ட் பேக் வளாகத்தில் அக்குற்றங்கள் புரியப்பட்டதாக 65 வயதான சார்ன் யுவென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஒரு லட்சம் வெள்ளி அபராதம், மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



