மாமன்னருக்கு நன்றி! ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 12 Nov, 2026
கோலாலம்பூர், நவ 12: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்குக்கு வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிக்க அனுமதி வழங்கிய மாமன்னரின் முடிவை எதிர்த்து எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடுவது, மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்தை எதிர்ப்பதாகக் கருதப்படலாம் என்று அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான அரச மன்னிப்பு, மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரத்தையும் தனிப்பட்ட சிறப்புரிமையையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மாமன்னரின் முடிவுக்கு அம்னோ நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மாமன்னரின் அதிகாரத்தையும் மலாய் ஆட்சியாளர்களின் மாண்பையும் கட்சி தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்க நஜிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சட்ட விவகாரப் பிரிவு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதற்கு 5 கோடி ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
அந்த அபராதத் தொகையை நஜிப் செலுத்திவிட்டதாக அவரது வழக்கறிஞர் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், வீட்டுக் காவல் உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நடவடிக்கைக்கு இடையே, உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்லாம் சைனுடின், நஜிப்பை உடனடியாக காஜாங் சிறையிலிருந்து தாமான் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு மாற்ற புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

