படகை அசைக்காமல் பாதுகாப்புத் தரும் துணைப் பிரதமருக்கு நன்றி! - வைபி குணராஜ்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜன 7: ஒற்றுமை அரசில் தற்போதைய பதவிக்காலம் முடியும் வரை பாரிசான் நேஷனல் தொடர்ந்து பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து செயல்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ள துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோ’ ஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடிக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக சிலாங்கூர், செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்சிலாங்கூர் முதல்வரின் ஊடகத் தொடர்பு சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தொலைநோக்குப் பார்வையுடனும், கொள்கை உறுதியுடனும் எடுக்கப்பட்ட சரியான தீர்மானம் என்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைக் குலைக்கும் எந்த நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், 'படகை அசைக்கக் கூடாது'  என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியல் நிலைத்தன்மையே கொள்கை தொடர்ச்சி, பொருளாதார மீட்பு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான அடிப்படை என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் துணைப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் ஆகியோரின் உறுதியான தலைமைக் கூட்டணி, நிர்வாக ஒத்திசைவு, அரசியல் முதிர்ச்சி மற்றும் திறமையான ஆட்சி முறையை நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டணி நல்லாட்சியை வலுப்படுத்தி, வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தி, மக்களின் நலனில் தொடர்ச்சியான கவனம் செலுத்த உதவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் நாடு எதிர்கொண்ட பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்கள் மீண்டும் நிகழக் கூடாது என்றும், அதற்காக அரசியல் நிலைத்தன்மையும் தேசிய ஒற்றுமையும் முதன்மையாகக் கருதப்பட வேண்டும் என்றும் PKR மத்திய தலைமைக் குழு உறுப்பினரும் மற்றும்
கோத்தா ராஜா கிளைத் தலைவருமான குணராஜ் வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போதைய நிலைத்தன்மையைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் நிராகரிக்கும் ஒற்றுமை அரசின் நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும், மக்களின் நலனும் மலேசியாவின் எதிர்காலமும் கருதி முதிர்ச்சியான  அரசியல் உரையாடல்கள் தொடரப்பட வேண்டும் என்றும் டாக்டர் ஜார்ஜ் குணராஜ் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *