மாயமான 55 மலேசியர்களின் நிலை என்ன? நேபாள் பிரதமருடன் அன்வார் பேச்சுவார்த்தை
- Shan Siva
- 22 Sep, 2026
கோலாலம்பூர், செப் 22: நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத 55 மலேசியர்களின் நிலை குறித்து, நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவுடன், இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்துரையாடினார்.
சீனாவிற்கு
மூன்று நாள் பணிப்பயணமாகப் புறப்படுவதற்கு முன்னதாக இந்த உரையாடல் நடைபெற்றதாக
அன்வார் தெரிவித்தார்.
தங்கள்
அன்புக்குரியவர்கள் குறித்த தகவலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின்
கவலைகளையும் நம்பிக்கைகளையும் தான் பகிர்ந்துகொண்டதாக அவர் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படாமலே
போகும் பட்சத்திலும், தேடுதல்
முயற்சிகளால் உறுதியான தகவலைப் பெற முடியாத சூழலிலும், அதைக் கையாள்வதற்கான ஒரு முறையான வழிமுறை தேவை என்பதை அவர்
வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட
குடும்பங்கள் சட்ட, நிதி மற்றும்
நிர்வாக ரீதியான விவகாரங்களைக் கையாள்வதற்கு இது முக்கியமானதாகும்.
இந்தப் பரிந்துரை
குறித்த விவரங்களை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை பிரதமர் ஷாவிற்கு
அனுப்புவேன் என்று அன்வார்
தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
அங்குள்ள சூழல்
மிகவும் கடினமாக இருப்பதாகவும், அந்தப் பேரிடர்
மற்றும் அழிவின் அளவு சுனாமியைப் போன்றது என்றும் ஷா விவரித்ததாக அன்வார்
கூறினார். அதே வேளையில், சவாலான சூழல்
நிலவினாலும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் உறுதியளித்ததாகவும்
அன்வார் தெரிவித்தார்.
மேற்கொள்ளப்படும்
ஒவ்வொரு முயற்சியும் நல்ல பலனைத் தரும் என்றும், குறிப்பாக இன்னும் கண்டுபிடிக்கப்படாத 55 மலேசியர்களின் குடும்பங்கள் எதிர்பார்க்கும்
உறுதியான தகவலை வழங்கும் என்றும் தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பேரிடரில்
1,400-க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளதாகவும், 6,000-க்கும்
மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



