அரசாங்கக் கட்சிகளின் விசுவாசத்தை சோதிக்கும் களமாக சபா தேர்தல் இருக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 24-

எதிர்வரும் சபா மாநில சட்டமன்றத் தேர்தல், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு இடையிலான உறவை சோதிக்கும் ஒரு களமாக விளங்கும் என்று, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸர்காஷி கூறியுள்ளார்.

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில், தொடர்ந்து கூட்டணி கட்சிகளாக இருந்து அத்தேர்தலைச் சந்திக்க ஒற்றுமை அரசாங்கக் கூட்டணி விரும்பினால், அதில் இடம் பெற்றிருக்கும் இதர கட்சிகள் தேசிய முன்னணியின் கருத்துகளை காது கொடுத்து கேட்க வேண்டும் என்று, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறியிருப்பது சரியானது என்று புவாட் தெரிவித்தார்.

விசுவாசத்திற்கு அம்னோ தலைமைத்துவம் மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது என்று கூறிய புவாட், இதன் காரணத்தினால்தான் அம்னோவினால் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுடன் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்க முடியாமல் போனதாக தெரிவித்தார்.“ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் மற்றொரு கட்சியின் கருத்துகளை காது கொடுத்துக் கேட்கின்றனவா என்பதை சோதித்துப் பார்க்கும் களமாக சபா சட்டமன்றத் தேர்தல் இருக்கும்.

“மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) அல்லது வாரிசானுடன் தேமு-பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுமா என்பதும் இதில் அடங்கும்.“ஜிஆர்எஸ்சுடன் ஒரு நல்ல உறவில் அம்னோ இல்லை என்பது வெளிப்படையாகத் தெரியும். அதுபோல், வாரிசானுடன் பக்காத்தான் ஹராப்பான் நல்ல உறவைக் கொண்டிருக்கவில்லை”என்று, ஒரு முகநூல் பதிவில் புவாட் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அவசியம் நடத்தப்பட்டுவிட வேண்டிய சபா சட்டமன்றத் தேர்தலில், தங்களின் கூட்டணியாக பக்காத்தான் ஹராப்பான் இருக்க வேண்டும் என்று தேமுவும் ஜிஆர்எஸ்சும் விரும்புகின்றன.

தற்போது சபா சட்டசபையில், வாரிசனுடன் சேர்ந்து தேசிய முன்னணி எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. ஜிஆர்எஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான மாநில அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் இடம் பெற்றிருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *