தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு மிக அவசியம்! - அந்தோணி லோக்
- Shan Siva
- 05 Nov, 2026
கிள்ளான், நவ 5: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சரும், டிஏபி பொதுச் செயலாளரும அந்தோணி லோக் தெரிவித்தார்.
குறிப்பாக, கோலாலம்பூரிலிருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களான கெடா, ஜோகூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் மின்சார ரயில் சேவையான ETS-க்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னதாக கூடுதல் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகமான பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மலேசிய ரயில்வே நிறுவனமான KTMB தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பண்டிகைக் காலங்களில் சாலைப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கா அ தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, ட்ரோபிகானா கோல்ஃப் அண்ட் கன்ட்ரி ரிசார்ட்டில் உள்ள இந்தியா கேட் உணவகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அமைச்சுக்கும் தமிழ் ஊடகத்துறையினருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமைந்ததாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சின் சேவைகள் குறித்த தகவல்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுவதாகவும், குறிப்பாக இந்தியச் சமூகத்தினருக்கு உரிய தகவல்கள் சென்றடைவதில் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாலைப் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான தகவல்களை மக்களிடம் தெளிவாகக் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊடகவியலாளர்களுடன் அமர்ந்து அமைச்சர் உணவருந்தியதோடு, அனைவருக்கும் தீபாவளி பரிசுக்கூடை வழங்கி மகிழ்வித்தார்.
மேலும் அதிர்ஷ்டக்குலுக்கும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் வழி வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பினை அதிர்ஷ்டசாலிகள் பெற்றனர்.
விதவிதமான உணவு வகைகளுடன், சுவையான தீபாவளி விருந்தாக அமைந்த இந்நிகழ்வில் அனைவருடனும் கலந்துரையாடி தமது தீபாவளி வாழ்த்துகளை அந்தோணிலோக் தெரிவித்துக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

