அமெரிக்கா தேர்தல் முடிவுகள்... இன - மதவாதத்தை நிராகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது! - அன்வார்
- Shan Siva
- 06 Nov, 2026
மலாக்கா, நவ 6: அமெரிக்க செனட் சபைக்கு முதல்முறையாக முஸ்லிம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இனவாதத்தையும் மதப் பாகுபாட்டையும் நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்தும் பாடமாக அமைந்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத் பெற்ற வெற்றியைச் சுட்டிக்காட்டிய அன்வார், அரசியலில் இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு இந்த வெற்றி ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார்.
ஜனநாயகம் என்றால் அனைத்து இனத்தவர்களும், மதத்தினரும் அரசியலில் பங்கேற்பதற்கும் தலைமைத்துவப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும் என்றும், இன உணர்வுகளையும் மதப் பாகுபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு எதிராக வெற்றி பெற்றவர்கள் இனவாதத்தை எதிர்க்கும் தரப்பினர் என்று குறிப்பிட்ட அன்வார், அவர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களில் இனவாதத்துக்கும் மத ஒடுக்குமுறைக்கும் எதிரான கருத்துகளை முன்வைத்து புதிய அரசியல் செய்தியை மக்களிடம் கொண்டு சென்றதாகத் தெரிவித்தார்.
இனவாதம் வலுப்பெறும்போது முஸ்லிம்கள் மட்டுமின்றி, ஏனைய சிறுபான்மைச் சமூகத்தினரும்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
மலாக்காவில் கிளேபாங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாமான் புக்கிட் ரம்பாய் பகுதியில் நடைபெற்ற மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் மிச்சிகன் மாநில செனட் தொகுதியில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத், அமெரிக்க செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.
இனப் பாகுபாட்டை நிராகரிப்பது அரசியல் மாற்றத்திற்கான வலுவான செய்தியாக அமைய முடியும் என்பதை இந்த வெற்றி எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், அமெரிக்காவின் அரசியல் நடைமுறைகளை மலேசியா அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.
மலேசியா தனக்கென தனித்துவமான அடையாளத்தையும், பல இன மக்கள் இணைந்து வாழும் வளமான நாட்டிற்கான அரசியல் கட்டமைப்பையும் கொண்டிருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

