மன்னரின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை! - அன்வார்
- Shan Siva
- 08 Nov, 2026
கோலாலம்பூர், நவ 8:மலேசிய மாமன்னரின் அதிகாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் விவகாரத்தில், அமலாக்கத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்கக் கோரியதற்கான காரணங்களை விளக்குவதற்கு சட்டத்துறை தலைமை அலுவலகம் விரைவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமைச் சந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நஜிப்புக்கு மாமன்னர் வழங்கிய நிபந்தனை மன்னிப்பு முடிவைத் தாம் மதிப்பதாகவும், அதனை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை என்றும் அன்வார் கூறினார்.
ஆனால், நஜிப்பின் எஸ்.ஆர்.சி. வழக்கில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான மற்றொரு வழக்கான 1எம்டிபி விவகாரம் காரணமாக சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இந்த விவகாரம் குறித்து சட்டத்துறை தலைமை அதிகாரி துசுக்கி மொக்தார் மாமன்னரை விரைவில் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும், நீதித்துறையின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படலாம் என்றும் அன்வார் தெரிவித்தார்.
இதற்கிடையில், நஜிப்பின் வீட்டுக் காவலை ஒத்திவைக்கக் கோரியது மாமன்னரின் நிபந்தனை மன்னிப்பு உத்தரவை எதிர்க்கும் முயற்சி அல்ல என்று சட்டத்துறை தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
நஜிப் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த விடுதலை உத்தரவின் சட்டரீதியான விளைவுகள் குறித்தே தற்போது கேள்வி எழுந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நஜிப்பின் சட்டக் குழுவான ஷாஃபி அண்ட் கோ, சட்டத்துறை தலைமை அதிகாரி தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாகவும், மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
இதற்கிடையில், மாமன்னர் வழங்கிய நிபந்தனை மன்னிப்பு உத்தரவு தெளிவானது என்றும், நஜிப்பின் மற்ற வழக்குகளுடன் அதற்குத் தொடர்பில்லை என்றும் இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை விளக்குவதில் குழப்பம் ஏற்படுத்துவதோ, அமல்படுத்துவதில் தேவையற்ற தாமதம் செய்வதோ கூடாது என்றும் அரண்மனை வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, நஜிப்பின் விடுதலை உத்தரவு தொடர்பான சட்ட விளக்கத்தை நீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறைச்சாலைத் துறை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை சட்ட ஆலோசனைக்காக சட்டத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

