செவ்வாய் கிரகத்தில் வெள்ளை நிறப் பாறைகள் சொல்லும் மர்ம ரகசியம்!

top-news
FREE WEBSITE AD

செவ்வாய் கிரகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வறண்ட, சிவப்பு நிற பாலைவனம்தான். அங்கு ஆய்வு செய்து வரும் பெர்சவரன்ஸ் ரோவர், தற்போது கண்டறிந்துள்ள சில 'வெள்ளை நிறப் பாறைகள்' உலகை அதிர வைத்துள்ளன.

இந்தப் பாறைகள் சொல்லும் ரகசியம் என்னவென்றால் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகம் பூமியின் வெப்பமண்டலப் பகுதிகளைப் போல (அமேசான் காடுகள்போல) கனமழையும், ஈரப்பதமும் கொண்ட இடமாக இருந்திருக்கலாம்.

ஜெஸீரோ பள்ளத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பெர்சவரன்ஸ் ரோவர், அங்குள்ள சிவப்பு நிறக் கற்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான சிறிய வெள்ளை நிறப் பாறைத் துண்டுகள் சிதறிக் கிடப்பதைக் கண்டது. இவை அந்தப் பகுதியில் உருவானவை அல்ல, எங்கோ தூரத்தில் உள்ள மலைகளிலிருந்து உடைந்து, ஆறுகள் மூலம் அடித்து வரப்பட்டவை என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இந்த வெள்ளை நிறப் பாறைகளை ரோவர் தனது கருவிகள் மூலம் ஆய்வு செய்தபோது, அதில் 'கயோலினைட்' என்ற களிமண் தாது இருப்பது தெரிந்தது. இது சாதாரணக் கண்டுபிடிப்பு அல்ல. பூமியில், இந்தக் களிமண் தாது எங்கே கிடைக்கும் தெரியுமா? எங்கே அதிக வெப்பமும், இடைவிடாத மழையும் பெய்கிறதோ அங்கேதான். மண்ணில் ஊடுருவிப் பாயும் கனமழைநீர், தேவையற்ற தாதுக்களை அடித்துச் சென்று அலுமினியம் மற்றும் சிலிக்கானை மட்டும் விட்டுச் செல்லும். இந்த வேதி மாற்றத்தால்தான் கயோலினைட் உருவாகிறது. இதன் மூலம், ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் பருவமழை பெய்திருக்கலாம் என்பது உறுதியாகிறது.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் மேகங்கள் சூழ்ந்து, வானிலிருந்து மழை கொட்டித் தீர்த்திருக்கிறது என்ற சித்திரம் இப்போது விஞ்ஞானிகள் கண்முன் விரிகிறது. எங்கே நீரும் வெப்பமும் இருக்கிறதோ, அங்கே உயிரினங்கள் உருவாக அதிக வாய்ப்பு உண்டு. எனவே, இந்த வெள்ளை பாறைகள் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஒரு முன்னோடித் தடயமாகக் கருதப்படுகிறது.

பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தில் மற்றொரு ஆச்சரியத்தையும் கண்டது. 'பிப்சக்ஸ்லா' (Phippsaksla) எனப் பெயரிடப்பட்ட விசித்திரமான பாறையை ஆய்வு செய்தபோது, அதில் இரும்பு மற்றும் நிக்கல் அதிகமாக இருந்தது. இது செவ்வாயில் உருவான கல் அல்ல; விண்வெளியில் இருந்து அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் (Meteorite) என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

தற்போது உறைந்துபோய்க் காணப்படும் செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் பூமியைப் போலவே மேகங்களும் மழையும் கொண்ட பசுமையான உலகமாக இருந்திருக்கலாம் என்பதையே இந்த மர்மப் பாறைகள் நமக்குச் சொல்கின்றன. பெர்சவரன்ஸ் ரோவரின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும், செவ்வாய் கிரகத்தை நமக்கு இன்னும் நெருக்கமாக்கி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *