பிரதமருக்கு முழுமையான புரிதல் இல்லை! – நெகிரி செம்பிலான் முதல்வர் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 24: நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 நிர்வாகக் குழு (exco) உறுப்பினர்கள் தங்கள் அலுவலகங்களுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் இஸ்மாயில் லாசிம் இன்று தெரிவித்தார்.

 நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தங்கள் கடமைகளைச் செய்வதிலிருந்தும் அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த உத்தரவின் அடிப்படை மற்றும் வரம்பு உள்ளிட்ட அம்சங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். அத்துடன், இச்சிக்கலைத் தீர்ப்பதற்கான சட்ட நடைமுறைகள் தடையின்றி நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து முறையான பதவியில் இருப்பதாகவும், தங்கள் கடமைகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அவர்களை அலுவலகங்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பதோ அல்லது நிர்வாகக் குழு கூட்டங்களை நடத்த விடாமல் தடுப்பதோ பொது நலன் சார்ந்த விஷயங்களைப் பாதிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

மேலும், பிரதமருக்கு இச்சிக்கல் குறித்த முழுமையான புரிதல் இல்லை என்றும் அவர் கூறினார்.

அரச நிறுவனத்தின் மீதான அன்வாரின் அக்கறையைத் தான் மதிப்பதாகக் கூறிய அவர், அதே வேளையில், பிரதமரின் கருத்துக்கள் இச்சிக்கல் குறித்த முழுமையற்ற புரிதலின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாகத் தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக நெகிரி செம்பிலான் முதலமைச்சர் மற்றும் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அரச நிறுவனம் பாதுகாக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டும் என்றும் அன்வார் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *