அரச உத்தரவுக் கடிதம் ஏஜிக்கு அனுப்பப்பட்டுள்ளது மாறாக என்னிடமல்ல- அன்வார்!

- Muthu Kumar
- 12 Jan, 2025
புக்கிட் மெர்தாஜம், ஜன. 12 -
தமது எஞ்சிய கால சிறை தண்டனையை, நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் இருந்து கழிக்க வகைச் செய்யும் அரச உத்தரவு தொடர்பான கடிதம், அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாறாக என்னிடமல்ல என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரச உத்தரவுக் கடிதத்தை அரசாங்கம் மூடி மறைத்து வைத்திருக்கிறது என்று, பல தரப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதால், அன்வார் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கின்றார்."(அரச உத்தரவு) கடிதம் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்னிடமோ (கூட்டரசு பிரதேச) மன்னிப்பு வாரிய உறுப்பினர்களுக்கோ அனுப்பி வைக்கப்படவில்லை. மாமன்னர் மாறிய பிறகு, மன்னிப்பு வாரியக் கூட்டத்திற்கு புதிய மாமன்னர் தலைமை வகிப்பதால் அக்கடிதத்தை அட்டர்னி ஜெனரல் இஸ்தானா நெகாராவிடம் ஒப்படைத்திருக்கின்றார்.
"உண்மை நிலை இதுதான். நாங்கள் அதை மூடி மறைத்து வைத்திருக்கவில்லை" என்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜமில் நேற்று சனிக்கிழமை நடந்த முஹிபா மடானி நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் வெளியிட்டிருந்த அரச உத்தரவுக்கு ஏற்ப, வீட்டுக் காவலின் கீழ் தாம் வைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் சீராய்வு மனுவை செய்வதற்கான அனுமதியை மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்து நஜிப் கடந்த 6ஆம் தேதி திங்கள்கிழமை பெற்றிருந்தார்.
அன்றைய தினம் அரச உத்தரவுக் கடிதம் இருப்பதை உறுதிப்படுத்தும், பகாங் மாநில அரண்மனையினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நஜிப்பின் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா வாசித்துக் காட்டிய பின்னர், அக்கடிதத்தை அரசாங்கம் மூடி மறைத்துவிட்டதாக பல தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் நஜிப்புக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கும் சிறை தண்டனைக்கும் முழு மன்னிப்பு வழங்கக் கோரி, மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் முறையீடு செய்யப்படும் என்று, கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.
நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை 6 ஆண்டுக்கும் 21 கோடி வெள்ளி அபராதத்தை 5 கோடி வெள்ளிக்கும் மன்னிப்பு வாரியம் கடந்த பிப்ரவரியில் குறைத்திருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *