மன நிம்மதியைத் தரும் மௌனி அமாவாசை!

top-news
FREE WEBSITE AD

மௌனி அமாவாசை ஓராண்டில் வரும் அமாவாசை திதிகளில் மிகவும் முக்கியமான அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாளில் முன்னோர் காரியம், தர்ப்பணம் செய்வது மட்டுமில்லாமல், மௌன விரதம் இருப்பது, புனித நதிகளில் நீராடுவது மற்றும் தானம் செய்வது ஆகியவை செய்யப்படும்.

மௌனி அமாவாசையில் கங்கையில் நீராடுவதால், முக்கூடல் சங்கமம், புண்ணிய நதிகளில் மற்றும் கடலில் நீராடுவதால் பாவங்கள் தொலைந்து ஆத்மா மோட்சம் அடைய உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

பஞ்சாங்கத்தின்படி, 2026 இல் மௌனி அமாவாசை ஜனவரி 18, 2026 ஞாயிறு அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசை வெகு விசேஷமானதாகும். மௌனி அமாவாசை என்பது தமிழ் பஞ்சாங்கத்தின் படி தை மாதம் வரும், தை அமாவாசை ஆகும். இந்த நாள், தேவர்களின் பகல் காலமான உத்திராயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாளில், முன்னோர்களுக்கான காரியம் மட்டுமில்லாமல், மௌன விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாகும். இதனாலேயே, இந்த அமாவாசைக்கு மௌனி அமாவாசை என்ற பெயர் உள்ளது.

2026 மௌனி அமாவாசை அன்று, சர்வார்த்த சித்தி யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் ஜனவரி 18 அன்று மலேசிய நேரப்படி காலை 12:44 மணிக்கு தொடங்கி ஜனவரி 19, அன்று காலை 9:44 மணி வரை நீடிக்கும். சர்வார்த்த சித்தி யோகம் தோன்றும் நாளில் செய்யும் செயல்கள் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும்.

இது தவிர, ஹர்ஷன யோகம் மற்றும் வஜ்ர யோகமும் உண்டாகிறது. சூரியன் மகர ராசியில் இருப்பார், மேலும் சந்திரன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுவார். இந்த யோகங்கள் புண்ணிய நீராடல் மற்றும் தானம் செய்வதால் ஏற்படும் பலன்களை பல மடங்கு அதிகரிக்கும்.

இந்து மதத்தின் மிகவும் புனிதமான நதியான கங்கை நதி நீர் மௌனி அமாவாசை அன்று அமிர்தமாக மாறும் என்று நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக மௌனி அமாவாசை அன்று கங்கையில் புனித நீராடுவதற்கான மிக முக்கியமான நாள் என்று கூறப்படுகிறது.

• மௌனி அமாவாசையில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால் மோட்சம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாகர மன்னரின் 60,000 மகன்களும் கங்கையில் நீராடி முக்தி பெற்றனர் என்பது புராணக்கதை.

• மௌன விரதம் அனுஷ்டிப்பதால் மனம் அமைதியடைகிறது மற்றும் ஆற்றல் மேம்படுகிறது.

இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நூல்களில் இருந்து பதிவு செய்யப்பட்டவை ஆகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *