பக்தி மணம் கமழ பக்தர்கள் புடைசூழ பத்துமலை நோக்கி வெள்ளிரதம்!

top-news
FREE WEBSITE AD

(கு.தேவேந்திரன்)

கோலாலம்பூர், பிப். 10-

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்திப் பாடல்கள் பஜனைகள் முழங்க வெள்ளி ரதம் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருத்தலத்தை நோக்கிப் புறப்பட்டது. ஜாலான் பண்டாரிலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதத்திற்கு முன்னும் பின்னுமாக பக்தர்கள் புடைசூழ பக்திப் பரவசத்துடன் மனமுருகி திருமுருகக் கடவுளைத் தரிசித்தனர்.

நாளை தைப்பூச விழா நாடுதழுவிய நிலையில் திருமுருகன் திருத்தலங்களில் மிக விமரிசையாக நடைபெறுகிறது.பெர்லிஸ் முதல் ஜொகூர் வரையுள்ள திருமுருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.பத்துமலை திருத்தலமான ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூச விழா கோலாகலமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது.

கடந்த ஒரு வார காலமாக பத்துமலை திருத்தலத்தில் ஆயிரக்கணக்கான காவடிகளும் பால்குடங்களும் ஏந்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இதனிடையே மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதம் பத்துமலை நோக்கிச் செல்லும்போது ஆங்காங்கே வழித்தடங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து புனிதநடைப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உணவுகளும் பானங்களும் வழங்கியதோடு வெள்ளி ரதத்தில் வள்ளி,தெய்வானை சமேதராக அமர்ந்திருக்கும் திருமுருகனுக்கும் அர்ச்சனை செய்தனர்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்றவாறு பக்தி மணம் கமழும் பாடல்களையும் பாடி வெள்ளி ரதத்துடன் பக்தர்கள் நடந்து சென்றனர்.

தமிழ் மலரின் தண்ணீர்ப் பந்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளி ரதம் வருவதையொட்டி தமிழ் மலர் பத்திரிகை பக்தர்களுக்காக தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்தது.வெள்ளிரதம் இன்று காலை 6.00 மணியளவில் தமிழ் மலரின் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தது. அப்போது தமிழ் மலர் சார்பில் திருமுருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதற்கு முன்பாக தமிழ் மலர் தண்ணீர்ப் பந்தலுக்கு ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன், இயக்குநர் டத்தோ எஸ்.எம்.பெரியசாமி ஆகியோருடன் பணியாளர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு, பானங்களை வழங்கினர். தமிழ் மலர் பத்திரிகையும் வழங்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *