காலத்தை உறைய வைக்கும் சீனாவின் ராட்சத இயந்திரம்!
- Muthu Kumar
- 05 Jan, 2026
சீனப் பொறியாளர்கள் பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளனர். CHIEF1900 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ராட்சத இயந்திரத்தை (Hypergravity Centrifuge) அவர்கள் உருவாக்கி முடித்துள்ளனர்.
இது சாதாரண இயந்திரமல்ல, பூமியின் ஈர்ப்பு விசையை விட 100 மடங்கு அதிக விசையை உருவாக்கக் கூடியது. இதன் மூலம் என்ன செய்ய முடியும்? நிஜ உலகில் பல 100 ஆண்டுகள் நடக்கக்கூடிய ஒரு மாற்றத்தை, இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு சில மணி நேரங்களில் ஆய்வகத்திற்குள் நடத்தி முடித்துவிட முடியும்.
பெரிய அணை நிலநடுக்கத்தால் உடைந்தால் என்ன நடக்கும்? அதை நிஜமாகச் சோதிக்க முடியாது. ஆனால், இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு 3 மீட்டர் அணை மாதிரியை வைத்து, அதன் மீது 100 மடங்கு ஈர்ப்பு விசையைச் செலுத்தி, அது எப்படி உடையும் என்பதைத் துல்லியமாக கணிக்க முடியும். புல்லட் ரயில்கள் அதிவேகமாகச் செல்லும்போது தரைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்யவும் இது உதவும்.
இதற்கு முன்பு அமெரிக்கா, சீனாவிடமே சில இயந்திரங்கள் இருந்தன. ஆனால், இந்த புதிய CHIEF1900 இயந்திரம் 19 லட்சம் கிலோகிராம் எடையைத் தாங்கும் திறன் கொண்டது. நாம் வீட்டில் பயன்படுத்தும் வாஷிங் மெஷினோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதன் திறனை விட இது பல கோடி மடங்கு வலிமையானது. இந்த இயந்திரம் செயல்படும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
நிலத்தின் அதிர்வுகள் ஆய்வைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக, இந்த ஆய்வகம் தரைமட்டத்திலிருந்து 15 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டுள்ளது. அதிவேகமாகச் சுழலும்போது ஏற்படும் கடும் வெப்பத்தைச் சமாளிக்க, விசேஷமான குளிரூட்டும் முறைகள் (Glacier Coolant) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மிக மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், வெறும் சீனாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து தங்களது ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா அழைப்பு விடுத்துள்ளது. மில்லி விநாடிகள் முதல் பல்லாயிரம் ஆண்டுகள் வரையிலான இயற்கை மாற்றங்களை ஒரே இடத்தில் ஆய்வு செய்ய இது உதவும். இதன் மூலம் மனிதகுலம் இதுவரை அறிந்திராத புதிய உண்மைகள் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



