‘IPOH’ மலைச்சரிவு சின்னத்தில் சீன எழுத்துகள்? – வைரலான படம் AI போலி என மாநகராட்சி விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 23: ஈப்போ மலைச்சரிவில் பிரமாண்டமாகத் திகழும் “IPOH” சின்னத்தின் அருகே சீன எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் படம், செயற்கை நுண்ணறிவு  மூலம் உருவாக்கப்பட்ட போலியான படம் என ஈப்போ மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

முகநூல் குழுவொன்றில் வெளியிடப்பட்ட அந்தப் படத்துடன், “ஈப்போ நகரம் பீஜிங்கின் ஒரு மாவட்டமாக மாறத் தொடங்கியுள்ளது” என்ற பதிவும் பகிரப்பட்டிருந்தது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் படத்தை பரப்புவது பொறுப்பற்ற செயல். இது பொதுமக்களை தவறாக வழிநடத்தி தேவையற்ற குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடும்” என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், இத்தகைய போலி தகவல்கள் ஈப்போ நகரின் நற்பெயருக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அவதூறாகவும் கருதப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், போலி படத்தை உருவாக்கியவர்கள் அல்லது பரப்பியவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கும் வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சுமார் 17 ஆண்டுகளாக குனுங் லாங் (Gunung Lang) அருகே அமைந்துள்ள ஹாலிவுட் பாணியிலான 'IPOH' மலைச்சரிவு சின்னம், ஈப்போ நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். அதன் ஒவ்வொரு எழுத்தும் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்டது.

இந்தச் சின்னம் பராமரிப்பு, ஆய்வு மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்காக கடந்த ஜூலை 15 ஆம் தேதி அகற்றப்பட்டதாகவும், வானிலை மற்றும் பணியின் முன்னேற்றத்தைப் பொறுத்து ஆகஸ்ட் 4 முதல் 6 வரை மீண்டும் கட்டம் கட்டமாக நிறுவப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *