இதுதான் முதிர்ச்சியான அரசியல்! - அன்வார்
- Shan Siva
- 30 Oct, 2026
கோலாலம்பூர், அக் 30: அரசியல் வேறுபாடுகள் நாட்டின் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தம் (CSA) கையெழுத்தானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
அரசியல் முதிர்ச்சி என்பது சுயநல அரசியலைவிட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகும் என்றும், இதன் மூலம் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் மக்களின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும் என அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானும் இடம்பெற்றுள்ளனர்.
பிரதமரின் பதவிக்காலத்துக்கு வரம்பு நிர்ணயிப்பது, சட்டத்துறைத் தலைவர் மற்றும் பொது வழக்கறிஞர் பொறுப்புகளைப் பிரிப்பது ஆகிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற தொகுதி மேம்பாட்டு நிதியும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை அன்வார் தலைமையிலான அரசாங்கத்துக்கும், 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துக்கும் தாங்கள் ஆதரவளிப்பதாக ஏழு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உறுதியளித்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

