2014ஆம் ஆண்டை விட இவ்வாண்டு வெள்ளம் மிக மோசமானதாக இருக்கலாம்!
- Muthu Kumar
- 29 Nov, 2024
புத்ராஜெயா, நவ. 29 -
கடந்த 2014ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, இவ்வாண்டில் தற்போது கிளந்தானையும் திரெங்கானுவையும் பாதித்து வரும் வெள்ளம் மிக மோசமானதாக அமையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கணித்திருக்கின்றார்.
எனினும், இப்பேரிடரை எதிர்கொள்ள தனது கேந்திரத்தை அரசாங்கம் மிக உயர் தயார்நிலையில் வைத்திருப்பதாக, தேசிய பேரிடர் நிர்வாகக் குழு (நட்மா) தலைவருமான ஸாஹிட் குறிப்பிட்டார். “மலேசிய வானிலை ஆய்வு இலாகாவின் (மெட்மலேசியா) கணிப்பின் அடிப்படையில், இவ்வாண்டின் வெள்ள நிலைமை கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்பட்டதைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, ஸாஹிட் தெரிவித்தார்.
வெள்ளம் ஏற்படக் கூடிய குறிப்பாக, கிழக்குக்கரை மாநிலங்களில் 82,794 அதிகாரிகள் வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக, புத்ராஜெயாவில் நேற்று வியாழக்கிழமை நடந்த அவசர வெள்ளப் பேரிடர் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது ஸாஹிட் கூறினார்.
இவ்வாண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக நாடு முழுமையிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் 21 லட்சம் பேரை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக மொத்தம் 8,481 வெள்ள நிவாரண மையங்களை அரசாங்கம் தயார்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.
கிளந்தானில் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கி இருக்கக் கூடிய அளவுக்கு 448 வெள்ள நிவாரண மையங்களும் திரெங்கானுவில் 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் தங்கி இருக்கக் கூடிய அளவுக்கு 749 வெள்ள நிவாரண மையங்களும் தயார்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டார்.
நாட்டில் இதுவரை ஏற்பட்டிருக்காத அளவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டில் பெருவெள்ளம் ஏற்பட்டிருந்தது. அதில் மொத்தம் 21 பேர் பலியாகி இருந்தனர். கிளந்தானில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டும் இருந்தனர்.இவ்வாண்டில், இது வரையில், திரெங்கானுவின் பெசுட் மாவட்டத்தில் உள்ள கம்போங் அமீரைச் சேர்ந்த 66 வயதுடைய துவான் ஜூசோ துவான் ஹசான் என்ற முதியவர் வெள்ளத்திற்கு பலியாகி இருக்கின்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



