எங்களை யார் என்று நினைத்தீர்கள்? நாங்கள் கைப்பாவைகள் அல்ல! - அக்மால் ஆவேசம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 11 : அம்னோவை (Umno) தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையிலும், பாரிசான் நேஷனலுடன் (Barisan Nasional) இணைந்து செயல்படுவது குறித்து பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) எப்படி தொடர்ந்து பரிசீலிக்க முடியும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமது அக்மால் சலே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் சந்தித்த தோல்விகளே, அவர்களை அம்னோவை தொடர்ந்து விமர்சிக்கத் தூண்டியதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் சரியில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அதே வேளையில், அம்னோவுடன் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தவும் வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

என்னை மற்றும் என் தலைவர்களை விமர்சித்துவிட்டு, இப்போது எங்களுடன் அமர்ந்து பிரச்சாரம் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியெல்லாம் நடக்காது.

எங்களை யார் என்று நினைத்தீர்கள்? உங்கள் கைப்பாவைகளா? என்று நேற்று நடைபெற்ற அம்னோ இளைஞர் பிரிவின் வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் விவாதங்களை நிறைவு செய்து பேசுகையில் அவர் கூறினார்.

மலாக்காவில் பாரிசானுடன் இணைந்து செயல்படுவது பற்றிய எண்ணத்தைக் கைவிடுமாறும் அவர் பக்காத்தானை கேட்டுக்கொண்டார்.

ஆன்லைனில் தனக்கு எதிராக வரும் வெறுப்புணர்வு மிக்க கருத்துகளுக்குத் தானே நேரடியாகப் பதிலளிப்பதாகவும் அக்மால் தெரிவித்தார்.

நாங்கள் சண்டையிட விரும்பினால், அதை வெளிப்படையாகவே செய்வோம். நீங்கள் என்னைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவித்தால், நானும் அதேபோல்தான் பதிலளிப்பேன்.

எனது அணுகுமுறை என்பது என் இயல்பு; ஆனால் எனது பதில் என்பது நீங்கள் யார் என்பதைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.

அம்னோ இளைஞர் பிரிவு எந்தவொரு சவாலையும் கண்டு ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்று கூறிய அவர், மலாக்கா தேர்தலில் பாரிசானை நேருக்கு நேர் எதிர்கொள்ளுமாறு பக்காத்தான் ஹராப்பானுக்குச் சவால் விடுத்தார்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அம்னோவில் உள்ளவர்கள் திருடர்கள் என்று அவர்கள் கூறலாம். ஆனால், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டாலே அவர்கள் குற்றவாளிகள் என்று அர்த்தமா? என அக்மால் கேள்வி எழுப்பினார்.

நமது தலைவர்களுக்கு தார்மீக ஆதரவை அளியுங்கள். நமது தலைவர்கள் இன்னும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாத நிலையில், நாம் வெட்கப்படத் தேவையில்லை என்று கூறிய அவர், முன்பு சிறைத்தண்டனை அனுபவித்த பக்காத்தான் தலைவர்களும் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *