யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நெகிரி செம்பிலான் விவகாரத்தில் அரசியலமைப்பு மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்! - அன்வார்
- Shan Siva
- 24 Sep, 2026
கோலாலம்பூர், செப் 24: நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் மற்றும் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அரச குடும்பத்தின் நிலைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றை முறையான வழிகளில் முன்வைக்கலாம் என்றும் அன்வார் கூறினார்.
ஆனால், மந்திரி பெசாரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மாநில ஆளுநரின் பதவியைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் எடுத்த முடிவு நாகரிகமற்றதும், அவமரியாதையானதுமாகும் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
மாநில ஆட்சியாளரின் பதவியை கேள்வி கேட்க அவர்களுக்கு எப்போது அதிகாரம் வழங்கப்பட்டது என்றும் அன்வார் கேள்வி எழுப்பினார்.
மலாய் இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவர், மற்றொரு மலாய் ஆட்சியாளரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை முன்வைப்பதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் விவகாரத்தில் அரசியலமைப்பு மீறப்பட்டால், மத்திய அரசு அதனை பாதுகாக்கும் என்றும் அன்வார் கூறினார்.
அரசியலமைப்பை மதிப்பதும், நாட்டின் அரச நிறுவனங்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கியதாகவும், அதற்குப் பதிலாக துங்கு நஸாருடின் துவாங்கு ஜாஃபரை புதிய ஆட்சியாளராக நியமித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



