இந்தோனேசியர் மீது துப்பாக்கிச்சூடு; முறையான விசாரணை தேவை! – மலேசியாவுக்கு இந்தோனேசிய அதிபர் கோரிக்கை
- Shan Siva
- 01 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 1: கடந்த வாரம் சிலாங்கூரில் ஐந்து இந்தோனேசியக் குடியேற்றத் தொழிலாளர்கள் மீது மலேசியக் கடலியல் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து மலேசிய அரசாங்கம் விரிவான புலன்விசாரணை நடத்தும் என்று இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து
கள்ளத்தனமாகத் தப்பிக்க முயன்ற அந்த இந்தோனேசியர்கள்
மீது தஞ்சோங் ரூ கடல்பகுதியில் மலேசியக் கடலியல் அமலாக்க முகமையைச் (MMEA) சேர்ந்த
அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்ததோடு நால்வர்
காயமுற்றனர் என்று இந்தோனேசியாவின்
தேசிய செய்தி நிறுவனமான அந்தாரா செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் இந்தோனேசியா முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது.
அதன் ஒரு பகுதியாக, ஜாகர்த்தாவில்
உள்ள மலேசியத் தூதரகக் கட்டடத்தை நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட
ஆர்ப்பாட்டக்காரர்கள் முட்டைகளை வீசித் தங்களின் கோபத்தை. வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும்
தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விவகாரம் குறித்து கோலாலம்பூரில்
திங்கள்கிழமையன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம்
விவாதித்ததாகவும் பிராபோவோ நேற்று தெரிவித்தார்.
மலேசியா மிகச்
சிறப்பான ஒரு விசாரணை நடத்தும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை என்றும்
அவர் கூறினார். இதர நாடுகளில் சட்ட விரோதமாக வேலைக்குச் செல்லும்
நடவடிக்கைக்கு இந்தோனேசியர்கள் பலியாகக் கூடாது. நமது குடிமக்கள் போலி
வாக்குறுதிகளை அளிக்கும் கும்பல்களால் ஏமாற்றப்படக் கூடாது என்று
இந்தோனேசியாவின் ‘கொம்பாஸ்’ ஊடகத்திடம் பிராபோவோ குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் கைது
செய்யப்படுவதற்கு எதிர்ப்புக் காட்டியதால்தான் அந்த ஐந்து இந்தோனேசியர்களும்
கடந்த வெள்ளிக்கிழமை சுடப்பட்டனர் என்று மலேசிய அதிகாரிகள் விளக்கம்
அளித்துள்ளனர். ஆனால், அக்கூற்றை
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது. கைது நடவடிக்கைக்குத் தாங்கள்
எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை என்று துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி தற்போது
கிள்ளான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு இந்தோனேசிய குடியேறிகள்
கூறியுள்ளனர் என்று இந்தோனேசிய. வெளியுறவு அமைச்சின் குடிமக்கள் பாதுகாப்புத்துறையின்
இயக்குநர் ஐூடா நுக்ராஹா குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச்
சூட்டில் உயிரிழந்த 54 வயதுடைய இந்தோனேசியரின் சடலம் புதன்கிழமையன்று அவரின்
சொந்த ஊரான ரியாவுக்கு அனுப்பப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



