“தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?” – கனிமொழி கேள்வி
- Surendran Sumdraraj
- 09 Sep, 2026
சென்னை, செப். 9 –
மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக அரசை திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ஆம் வகுப்பு மாணவன், கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் உடற்கூறு ஆய்வில், அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கருத்து வெளியிட்ட கனிமொழி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
“சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாணவனின் மரணம் தொடர்பாக எந்த சமரசமும் இல்லாமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



