இந்தோனேசியாவில் மூன்று மலேசிய பெண்கள் கைது – போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு
- Shan Siva
- 06 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 6: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ள சுகார்னோ–ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியாவைச் சேர்ந்த மூன்று பெண்களைப் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த மூவரும் சபாவின் கோத்தா கினபாலுவிலிருந்து வந்தடைந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதாக இந்தோனேசிய சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனையில், பயணப் பைகள், கைப்பைகள், ஆடைகளுக்கான பைகள், காலணிகள் மற்றும் மருந்துப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதிகாரிகள் மொத்தமாக 2.4 கிராம் கோகெய்ன் என சந்தேகிக்கப்படும் பொடி, 8.4 கிராம் எம்.டி.எம்.ஏ. (MDMA) மாத்திரைகள், மற்றும் கெத்தமின் கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 16.9 கிராம் சுருட்டப்பட்ட புகையிலை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 30 முதல் 39 வயதுக்குட்பட்ட சபாவைச் சேர்ந்தவர்கள் என்பதை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறை இயக்குநர் ஹுசைன் ஒமார் கான் உறுதிப்படுத்தினார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த மூவரும் சுற்றுலா நோக்கில் இந்தோனேசியா சென்றிருந்ததாகவும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், அவை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



