அப்போது ஏன் வாய் திறக்கவில்லை! ஆள்மாறிப்போன நீங்கள் இப்போது துடிப்பது ஏன்? - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், செப் 22: அண்மையில் கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, அர்சாங்கத்திற்கு சில கேள்விகளை முன்வைத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

சிறந்த அடைவு நிலை பெற்ற ஒரு மாணவர் பெட்ரோனாஸ் (Petronas) கல்வி உதவித்தொகைக்கும், பொது சேவைத்துறை (JPA) உதவித்தொகைக்கும் விண்ணப்பித்திருந்ததாகவும்.  ஆனால், அவரது இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சார்லஸ் சந்தியாகோ அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

மேலும், மலேசியாவைச் சேர்ந்த சுமார் 5,00,000 திறமையான தொழில்முறை வல்லுநர்கள் (Professionals) வெளிநாடுகளுக்க சென்றுவிட்டதாக கடந்த 2022ல் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி சார்லஸ் பேசியிருந்தார்.

 9 'A' பெற்ற மாணவரால்  இந்த நாட்டில் கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை? பிறகு எப்படி திறமையான மாணவர்கள் இந்த நாட்டில் இருப்பார்கள்  என சார்லஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இது அமைச்சருக்கு விடுக்கப்படும் ஒரு சவால் என்றும், அமைச்சரின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்றும் அரசுக்கு  சவால்வேறு விடுத்திருந்தார்.

சார்லஸ் சந்தியாகோவின் இந்த ஆதங்கம் குறித்து, ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா தியாகராஜன் தமது கருத்தை முன் வைத்துள்ளார்.

சார்லஸ் சந்தியாகோவின் கேள்வி மிக மிக நியாயமானது. அதை நான் வரவேற்கிறேன், பராட்டுகிறேன் என்று கூறினார்.

அதேபோல் திறமை வாய்ந்த நம் மாணவச் செல்வங்களை அரவணைத்து, அவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலையைக் கொடுத்து, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களை ஈடுபட வைப்பதும் அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையுமாகும்.

ஆனால், கடந்த கால அரசும் சரி , தற்போதைய அரசும் சரி, இந்த விவகாரத்தில கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியதே என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் அரசாங்கத்தைச் சாடினார். 

அதே வேளை, இப்போது  குரல் கொடுக்கும் இந்த சார்லஸ் சந்தியாகோ ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. மூன்று முறை  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மக்களின் பிரதிநிதியாக தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்படி மத்திய அரசில் மாண்புமிகுவாக இருந்த அவருக்குத் தெரியாதா நம் பிள்ளைகள் எதிர்நோக்கும் இது போன்ற சிக்கல்கள் குறித்து? அந்த நேரத்தில் அவர் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கலாமே. இன்று பதவியில் இல்லாத சூழலிலும் அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுப்பவர், அன்று பதவியில் இருந்த போது ஏன் வாய் திறக்கவில்லை.  எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இப்போது மட்டும் சத்தம் போடுவது ஏன்? எம்பியாக இருக்கும்போது உங்கள் கடமையை நீங்கள் ஒழுங்காகச் செய்திருந்தால். நம்ம பிள்ளைகள் ஏன் வெளிநாடு தேடிப் போக வேண்டும்?
என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

நீங்கள் இருந்த  மூன்று தவணை காலகட்டத்தில் எத்தனை  மாணவர்களுக்கு உதவி செய்திருக்கிறீர்கள்? என்று பட்டியல் போட முடியுமா?

தனிப்பட்ட முறையில் நம் சமுதாயப் பிள்ளைகளுக்கு உண்மையில் ஏதாவது செய்திருக்கிறீர்களா? ஒரு பிள்ளையையாவது படிக்க வைத்திருக்கிறீர்களா? 
நீங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு முன்னும் பின்னும் இருந்த அரசியல்வாதிகள் தனிப்பட்ட முறையில் நம் மாணவர்களுக்கு என ஏதாவது செய்துள்ளார்களா? என ஓம்ஸ் பா.தியாகராஜன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

நமது நாட்டைப் பொருத்தமட்டில் அரசியல் சாராத  தொழிலதிபர்கள், பிரமுகர்கள், அரசு சரா அமைப்புகள் என எத்தனையோ பேர் நம் சமுதாய மாணவர்களுக்காக உதவிபுரிந்திருக்கிறார்கள்.
அதை எழுத்துப்பூர்வமாக என்னால் நிரூபிக்க முடியும்.  உங்களால் உங்கள் கல்விச் சேவையை நிரூபிக்க முடியுமா?

உங்கள் தொகுதிக்கு உட்பட்ட சிறந்த அடைவுநிலை பெற்ற எத்தனை மாணவர்களுக்கு நீங்கள் உதவியுள்ளீர்கள்? உங்கள் தொகுதியில் உள்ள சிறந்த மாணவர்களை அடையாளம் கண்டு,
எங்கள் தொகுதியில் இத்தனை மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த மாதிரியான வாய்ப்புகளை அரசு வழங்க வேண்டும் என அப்போது ஏன் அரசாங்கத்தை நோக்கி நீங்கள் கேள்வி எழுப்பவில்லை? 

"எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு பதிலைச் சொல்லுங்கள்" என்று, நீங்கள் பதவியில் இருந்த நேரத்தில் பிரதமரிடம் கேட்டிருந்தால் அதுதான் உங்கள் பதவிக்கு அழகு. அந்த மாதிரி ஒவ்வொரு அரசியல்வாதிகளும் செய்திருக்க வேண்டும். ஏன்? அப்போது யாருமே வாயைத் திறக்கவில்லை என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.

பணம், பதவி, ஏன் இப்போது கிடைக்கும் பென்சன் வரை எல்லாம் மக்களால் உங்களுக்குக் கிடைத்தது. அந்த மக்களுக்கு ப்பதிலுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

நீங்களே உங்கள் தொகுதியின் சிறந்த மாணவர்களை வைத்து ஒரு பேட்டி கொடுத்திருக்கலாமே. அப்படி கொடுத்திருந்தால் பிரதமர் நிச்சயம் ஒரு பதில் கொடுத்திருப்பார். ஒன்று இல்லை என்று சொல்வார், இல்லையென்றால் ஏதாவது செய்திருப்பார். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? அரசியல் உங்களையும் பாழ்படுத்திவிட்டது என்றே உணர்கிறேன்.

நீங்கள் என் தொகுதி என்பது மட்டுமல்லாமல், உங்களைப் பற்றி நன்கு அறிந்த நண்பர்களில் ஒருவனாக  இருந்தவன்  என்ற முறையில. சொல்கிறேன். 

நண்பராக இருந்தபோது  தில்லுமுல்லுக் காரர்களும் கூட இருக்கத்தான் செய்தார்கள். பாம்புக்குப் பாலை வார்த்து வளர்த்தீர்கள் என்பதை நான் அறிவேன். 

ஒரு தனியார் ஊடகத்தில் சாதிச் சாயம் பூசி என்னை அவதூறாகச் சித்தரித்தபோது, அதன் பின்னணியில் உங்களால் பாலூற்றி வளர்க்கப்பட்ட நபர் இருந்தார் என்பதும் எனக்குத் தெரியும். 
 
இந்த விவகாரம் குறித்து உங்களுக்குத் தெரிந்திருந்தும், கண்டுகொள்ளாமல் இருந்ததையும் நான் அறிவேன்.

இப்படி ஆள் மாறிப்போன நீங்கள்இப்போது மட்டும் மக்களுக்காகத் துடிப்பது ஏன் என்றுதான் விளங்கவில்லை என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.

எது எப்படியோ இப்போது சார்லஸ் சந்தியாகோ அரசுக்கு முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே எது எண்ணமும் .

இதற்குப் பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் பதில் சொல்ல வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.

அதேபோல்  சார்லஸும் நான் முன் வைத்துள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *