பிறர் அவமதிக்கும்போது அமைதி காப்பது ஏன்?பாஸ் தலைவர்களுக்கு கேள்வி!

- Muthu Kumar
- 31 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 31-
கூட்டரசு அமைச்சர் ஹன்னா இயோவை பேராக் பாஸ் தலைவர் ரஸ்மான் ஸக்காரியா அண்மையில் அவமதித்தபோது அதனைக் கண்டிக்காமல் அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மானும் வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன் என்று பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் கட்சித் தலைவர்கள் மற்றவர்களை அவதூறாக பேசும்போது அது குறித்து ஹாடியும் துவான் மானும் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்றும் கெடா மாநில பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரான தாவ்ஃபிக் ஜொஹாரி வினவினார்.
இத்தகைய தலைவர்களை பாஸ் கட்சியின் சமய அறிஞர்களும் கண்டிக்காமல் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. பாஸ் தலைவர்கள் உண்மையிலேயே இஸ்லாமிய போதனைகளை அமல்படுத்துபவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் ஏன் வாய்மூடி இருக்க வேண்டும்? இதுபோன்ற கபடநாடகத்தை அவர்கள் வழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தாவ்ஃபிக் வலியுறுத்தியுள்ளார்.
தங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிப்பவர்களை மன்னிப்பவர்களைப் பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் அந்த மன்னிப்பு உளப்பூர்வமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று துவான் இப்ராஹிம் கூறியதற்கு மறுமொழியாக தாவ்ஃபிக் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவை ஓய்டிஎல் நிறுவனத்தின் இயோ குடும்பத்தினருடன் ரஸ்மான் அண்மையில் சம்பந்தப்படுத்திப்
பேசியிருந்தார். அதற்கு ஹன்னா இயோ கண்டனம் தெரிவித்த நிலையில், ரஸ்மான் மன்னிப்புக் கேட்டிருந்தார். ஆனாலும், ரஸ்மானுக்கு கோரிக்கைக் கடிதத்தை அனுப்பப் போவதாக ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
வருத்தம் தெரிவிப்பவர்களை மன்னிக்க வேண்டும் என்று துவான் இப்ராஹிம் கூறியிருப்பது பற்றி கருத்துரைத்த தாவ்ஃபிக், மற்றவர்களைத் தொடர்ந்து அவதூறு செய்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று வினவினார்.இதற்கு முன்பு, ஜசெகவின் மூத்த தலைவர்களான லிம் கிட் சியாங், லிம் குவான் எங், திரேசா கோக் ஆகியோரை அவமதித்த பல குற்றத்திற்காக பாஸ் கட்சியைச் சேர்ந்தவரான சித்தி மஸ்தூரா முகமது எனும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எட்டு லட்சத்து முப்பதாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *