நாம் ஏன் சண்டையிட வேண்டும்?! - அன்வார்
- Shan Siva
- 21 Jun, 2026
சிரம்பான், ஜூன் 21: நாட்டின் முக்கிய சவால் இன வேறுபாடுகளிலிருந்து வரவில்லை, மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களிடமிருந்தே வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அனைத்து இனப் பின்னணியைச் சேர்ந்த மலேசியர்களும் ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும், சில தரப்பினர் வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கும் முயற்சிகளை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மலாய், சீனர், இந்தியர், ஓராங் அஸ்லி, டாயக் மற்றும் கடசான் குழந்தைகள் அனைவரும் இங்கே ஒன்றாக இருப்பதை காண்கிறோம், நாம் ஏன் சண்டையிட வேண்டும்? நாம் ஏன் ஒருவரையொருவர் வெறுக்க வேண்டும்?என்று அவர் வினவினார்.
நமது குறிக்கோள் ஒன்றாக இருக்க வேண்டும். நம் குழந்தைகள் அனைவரும் தூய்மையான சூழலில் வளர்ந்து, நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மலாய், சீனர், இந்தியர், ஓராங் அஸ்லி, இபான் மற்றும் கடசான் சமூகங்களை உள்ளடக்கிய மலேசியாவின் பன்முகத்தன்மை ஒரு முழுமையான பலம் என்று அவர் விளக்கினார்.
நமது பிரச்சனை இனம் அல்ல. நமது பிரச்சனை அதிகார துஷ்பிரயோகம்." "இது தொடர வேண்டுமா?" என்று அவர் நேற்று இரவு நடைபெற்ற பி.எல்.ஜ மலேசியா இரவு விருந்தில் பேசும்போது கூறினார்.
சமூகத்தைப் பிளவுபடுத்துவதற்காக இன உணர்வுகளைத் தூண்டிவிடும் தலைவர்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அன்வார் நினைவூட்டினார்.
சில தரப்பினரால் வேண்டுமென்றே தூண்டிவிடப்படும் வெறுப்புணர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருந்தால், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மலேசியர்கள் இணக்கமாக வாழவும், ஒன்றிணைந்து செயல்படவும், ஒரு சக்திவாய்ந்த சமூகமாக உருவெடுக்கவும் திறன் கொண்டவர்கள் என்று அவர் கூறினார்.
நாட்டைப் பாதுகாத்து மேம்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தலைவர்கள், தங்கள் பொறுப்புகளை நேர்மையாகவும் உண்மையாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று அன்வார் கூறினார்.
மேலும் மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருக்கும் நேர்மையான தலைவர்கள் மலேசியாவிற்குத் தேவை என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், சீர்திருத்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குமான முயற்சிகளில் இளைஞர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



