பள்ளி மேம்பட பெற்றோரும் ஆசிரியர்களும் முக்கிய தூண்கள் - ஓம்ஸ் பா.தியாகராஜன் புகழாரம்
- Surendran Sumdraraj
- 17 Mar, 2026
அம்பாங், மார்ச் 17-
ஒரு பள்ளியின் மேம்பாட்டிற்குப் பெற்றோரும் ஆசிரியர்களும் மிக முக்கிய தூண்களாக ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் என ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் வலியுறுத்தினார். இந்தத் தூண்கள் இரண்டும் தங்களது பங்கை, சேவையை பள்ளியின் வளர்ச்சிக்கு ஆற்றுவார்களேயானால் அப்பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக விளங்கும் என்பது சந்தேகம் இல்லை.
பொதுவாக தாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் குறிப்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிலையை அறிந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
அம்பாங் தமிழ்ப்பள்ளிக்கென ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் வெற்றிப் பக்கங்களில் பள்ளியின் வளர்ச்சிக்காக உழைத்த அனைவருக்கும் நிச்சயமாக ஓர் இடமுண்டு என்று கூறிய ஓம்ஸ் பா.தியாகராஜன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓவ்வொரு சிறப்பு விருந்தினர்களின் சேவையையும் நினைவுகூர்ந்து பேசியது அனைவரின் பாரட்டுதலையும் பெற்றது.
மேலும் பொதுவாக ஒரு பாரதியைக் கண்டு விட மாட்டோமா என ஏங்கி தவிக்கின்ற இந்நாளில் பள்ளியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பாரதிகளாகவே தங்களை உருமாற்றி, உடைமாற்றி அமர்ந்திருப்பது தமக்கு பெருமிதத்தையும் அதேவேளையில் மகிழ்ச்சியை அளிப்பதாக செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் குறிப்பிட்டார்.
இன்று காலை தேசிய வகை அம்பாங் தமிழ்ப்பள்ளியின் 2026ஆம் ஆண்டு செந்தமிழ் விழாவில் கலந்து சிறப்பித்த அவர் அவ்வாறு தெரிவித்தார். இதனிடையே செந்தமிழ் விழாவின் முத்தாய்ப்பு அங்கமாக மாணவர்களின் தமிழ் படைப்பு வருகையளித்த அனைவருக்கும் கண்கவர் விருந்தாக அமைந்தது. ஒவ்வொரு ஆண்டைச் சேர்ந்த மாணவர்களும் மேடையைத் தங்கள் வசமாக்கி தமிழ் விருந்து படைத்து அனைவரின் பாராட்டினைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக தமிழர்களின் வாழ்வியலை அலங்கரித்த பொருட்கள் அருங்காட்சியகமாக சிறப்பு விருந்தினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் காட்டப்பட்டது. அக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பார்வையாளர்களின் பழைய நினைவலைகளை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செந்தமிழ் விழாவில் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் ஒளவை முருகன், பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மேனகா பொன்னையா, பிரதமர் துறை அதிகாரியும் விலாயா நகராண்மைக் கழக உறுப்பினர் ஜோன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரவீந்திரன் முனுசாமி, துணைத் தலைவர் முருகன், மேலாளர் வாரியத் தலைவர் ஜேம்ஸ் காளிமுத்து, பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பொன் ரங்கன், நிர்வாகத் துணைத் தலைமையாசிரியர் திருமதி விக்டோரியா, இணைப்பாடத் தலைமையாசிரியர் செல்வகுமார் உட்பட பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



