மைக்கேல் ஜாக்சன் வியந்த கலை பரதம்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Shan Siva
- 29 Dec, 2025
கிள்ளான் , டிச் 29: மேகலை பரதாலயா நடன அகாடமியின் சலங்கை பூஜை சமர்ப்பண விழா தலைநகர் சோமா அரங்கில் நேற்று வெகு சிறப்பாய் நடைபெற்றது.
நிகழ்வில் ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா. தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் பரதக் கலை இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு புனிதக் கலை அந்தக் கலையை நன்கு கற்றுத் தேர்ந்து, தான் பெற்ற கலையின் மூலம் மென்மேலும் பல கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்கிற நல்ல நோக்கில் பரதம் கற்றுக் கொடுத்து ஆசிரியை திருமதி மணிமேகலைக்கு தமது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
கடந்த காலங்களில் பரதக் கலைக்கு அவ்வளவு ஆதரவு இருந்ததில்லை. ஆனால் தற்போது இக்கலைக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அதற்குக் காரணமாக விளங்கும் பெற்றோர்களுக்கும் பாரட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றவர் கூறினார்.
அவர்கள் நினைத்திருந்தால் எத்தனையோ விதவிதமான நடனங்கள் இருக்கின்றன. ஆனால் நம் கலைகளில் புனிதமான இந்தக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பிள்ளைகளை சேர்த்து விட்டிருக்கிறார்கள் அவர்களைப் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். எனவே இக்கலையைச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்வது சாலச் சிறந்தது என அவர் தெரிவித்தார்.
பாப் உலகின் நடனமன்னன் மைக்கேல் ஜாக்சன் ஒரு சர்வதேச விழாவில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நடனங்களை ஆட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்கான பயிற்சிகளையுமெடுத்து அந்த விழாவில் நடனங்களைப் படைத்தாராம். ஆனால் இந்தியக் கலையான பரதநாட்டியத்தை மட்டும் அவர் ஆடாமல் வேறொரு பெண் வந்து ஆடிச் சென்றாராம். இதற்கான காரணத்தை பத்திரிகையாளர்கள் கேட்க எல்லா நாடுகளின் நடனத்தையும் கற்றுக்கொள்ள என்னால் முடிந்தது, ஆனால் பரதம் அவ்வளவு எளிதாக இல்லை. உண்மையில் பரதம் தெரிந்துகொண்டால் எந்த நாட்டின் நடனத்தையும் எளிதாக ஆட முடியும். ஆனால் பரதத்தைக் கற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றாராம். அந்த அளவுக்கும் பரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்தக் கலையைப் பயின்று அத்தனை மாணவச் செல்வங்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள் எனக் கூறினார்.
நடன மணிக்கு காலில் சலங்கை எவ்வளவு முக்கியமோ அது போல் நடனத்துக்கு இசை மிக மிக அவசியம் அந்த வகையில் இந்த நிகழ்விற்கு இசையைச் சிறப்பாக வழங்கிய இசைக் கலைஞர்களுக்கும் நன்றிகள் என அவர் தெரிவித்தார்
நடனமணிகளின் பல்வேறு வகையான அபிநயங்கள் காண்போரை மகிழ்வித்து கரவொலியிட வைத்தன. வண்ணமயமான ஆடைகளோடு மாலை அணிந்து மனம்முழுக்க இறைவனை நினைந்து உருகி உருகி சலங்கையால் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தனர் நடனமணிகள். மாணவச் செல்வங்களுக்கு நற்சான்றிதழை எடுத்து வழங்கினார் ஓம்ஸ் பா.தியகராஜன்.
விருந்துபசரிப்போடு இனிதே நிறைவுற்றது விழா!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



