பார்வையற்ற கணவரைக் கொன்ற மனைவி & சகோதரருக்கு 33 ஆண்டுகள் சிறை
- Shan Siva
- 11 Feb, 2026
புத்ராஜெயா, பிப் 11: காஜாங்
பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது பார்வையற்ற கணவரைக் கொலை செய்த
வழக்கில் தண்டனை பெற்ற பெண்ணும் அவரது சகோதரரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை
கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்ததால், அவர்களுக்கு
விதிக்கப்பட்ட 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அமலில் தொடரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி ரோத்ஸாரியா புஜாங் தலைமையிலான
மூன்று நீதிபதிகள் அமர்வு, சூழ்நிலைச் சான்றுகள் அனைத்தும் எஸ்.
ஏஞ்சலா தேவி (49) மற்றும் அவரது சகோதரர் விஜயா (45)
ஆகியோர் குற்றத்தை செய்ததைக் தெளிவாக நிரூபிப்பதாகத்
தெரிவித்தது.
இருவருக்கும் மேல் முறையீட்டு
நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனை தொடரும் என்று நீதிபதி ரோத்ஸாரியா கூறினார்.
அவருடன் நீதிபதிகள் நஸ்லான் கஸாலி மற்றும் கொல்லின் லாரன்ஸ் சேகுவேரா
அமர்ந்திருந்தனர்.
2020 அக்டோபர் 1ஆம்
தேதி நண்பகல் அளவில், காஜாங் கம்போங் பாரு சுங்கை சூவா பகுதியில் உள்ள PKNS குடியிருப்பில் அமைந்த வீட்டில், 59 வயதான
ஆர். தேவராஜூ என்பவரைக் கொலை செய்ததாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
அப்போது தனது வீட்டில் கொள்ளை நடந்ததாகவும்,
போக்குவரத்து மற்றும் ஸ்கிராப் இரும்பு தொழில் நடத்தி வந்த
தனது கணவர் தலையில் தாக்கப்பட்டதாகவும் ஏஞ்சலா போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், சொத்து
பரம்பரை தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸ்
விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது.
2024ஆம் ஆண்டு, உயர்நீதிமன்றம்
விதித்த மரண தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் 33 ஆண்டுகள்
சிறைத்தண்டனையாக மாற்றியது.
ஏஞ்சலாவின் சிறைத்தண்டனை 2020 அக்டோபர் 10 முதல் அமலுக்கு வந்ததாகவும், விஜயாவின் தண்டனை ஒரு வாரம் கழித்து அமல்படுத்தப்பட்டதாகவும்
உத்தரவிடப்பட்டது.
50 வயதுக்கு குறைவானவராக இருப்பதால்,
விஜயாவுக்கு குறைந்தது 10 பிரம்படிகள்
தண்டனையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



