அமைச்சுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதைக் குறிக்காது – அன்வார்
- Shan Siva
- 30 Oct, 2026
கோலாலம்பூர், அக் 30: அமைச்சுகளுக்கு இடையே நிலவும் கருத்து அல்லது அணுகுமுறை வேறுபாடுகள், அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதைக் குறிக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மாறாக, ஒவ்வொரு அமைச்சும் தங்களுக்குரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் மற்றும் முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு கொள்கைகள் தொடர்பான விவாதங்களையும் பரிசீலனைகளையும் மேற்கொள்வதன் ஒரு பகுதியாகவே இத்தகைய வேறுபாடுகள் அமைவதாக அவர் விளக்கினார்.
அரசாங்கத்தின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அமைச்சுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு முறையாக மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.
கொள்கைகளில் ஒருமித்த அணுகுமுறையை உறுதிப்படுத்துதல்,
பொறுப்புகள் ஒன்றோடொன்று முரண்படுவதைத் தவிர்த்தல், மக்களின் நலன்கள், நாட்டின் மேம்பாட்டு முன்னுரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி வசதிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது ஆகியவை இதன் நோக்கங்கள் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நிதியமைச்சுக்கும் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சுக்கும் இடையே பொதுவெளியில் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

