மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலேசியத் தமிழ்க்கவிதை களஞ்சியம் நூலாய்வு!
- Thinagaren Sanggaren
- 10 Jan, 2026
ஜனவரி 10,
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மாணவர்களுக்கு மலேசியத் தமிழ்க் கவிதைகளின் தொடர்பான கலந்துரையாடலை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் தமிழவேள் கோ.சாரங்கபாணி அறக்கட்டளையும் இணைந்து நடத்தினர். மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்தான பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளுடன் மேனாள் துணை அமைச்சர் தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கி. குமரன் அவர்களுடன் முனைவர் முரசு நெடுமாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் 'மலேசியத் தமிழ்க் கவிதை களஞ்சியம்'
நூல் குறித்த சிறப்பு ஆய்வையும் மாணவர்கள் நடத்தினர். மூத்த அறிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
அவர்களால் தொகுக்கப்பட்ட இந்நூல், மலேசியத் தமிழ்க் கவிதைகளின் வரலாற்றுப் பெட்டகமாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை இந்திய ஆய்வியல் துறையின் மேனாள் துறை தலைவர் முனைவர் கிருஷ்ணன்
மணியம் அவர்கள் முன்னெடுப்பில் இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் இரவீந்திரன் மாரையா அவர்களின் ஒத்துழைப்புடனும் வழிகாட்டலுடனும் இந்திய ஆய்வியல் கழகத்தின் தலைவர் யுவித்ரா மோகன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இத்தகு ஆய்வரங்கம், பல்கலைக்கழக மாணவர்களிடையே இலக்கியத் தேடலை ஊக்குவிக்கும் முன் முயற்சியாகக் கருதப்படுகிறது.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, இந்திய ஆய்வியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முனைவர் முரசு நெடுமாறனின் கவிதைத் தொகுப்பினை ஆய்வு செய்து தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். மலேசியத் தமிழ் கவிதைகளின் தோற்றம், வளர்ச்சியுடன் அதன் சமூகத் தாக்கம் குறித்தும் மாணவர்களிடையே விவாதங்களும் எழுந்தது.
இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுடன் மேனாள் துணை அமைச்சர் தான்ஸ்ரீ டத்தோ டாக்டர் கி. குமாரன் அவர்களும் இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் இரவீந்திரன், திருக்குறள் அமர்வின் தலைவர் முனைவர் செல்லப்பா, முனைவர்
கிருஷ்ணன் மணியம், முனைவர் மன்னர் மன்னன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் முனைவர் முரசு நெடுமாறன்
அவர்கள் தாம் எழுதிய 'எழிலோவியம்' எனும் நூலினை இந்திய ஆய்வியல் துறைக்கும், ஆய்வுக்கட்டுரை வழங்கிய மாணவர்களுக்கும் நினைவுப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார். மூத்த ஆளுமைகளின் வருகை மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதானக் கூடுதல் ஆர்வத்தையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது.
முனைவர் முரசு நெடுமாறன், தனது கடும் உழைப்பில் உருவான இக்கவிதை களஞ்சியத்தை இளைய தலைமுறை மாணவர்கள் இவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்ததைக் கண்டு தான் மனநிறைவடைவதாகத் தெரிவித்தார். கல்விப்புலத்தில் இத்தகைய ஆய்வுகள் தொடர்வது மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செழுமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உதவும் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



