குறைந்தபட்ச வெ.1,700 சம்பளம் மிக நியாயமானதே-ஸ்டீபன் சிம்!

- Muthu Kumar
- 03 Feb, 2025
ஜோர்ஜ்டவுன், பிப். 3-
இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுமையிலும் அமலுக்கு வந்துள்ள குறைந்தபட்ச சம்பளம் இப்போதைக்கு மிகவும் நியாயமான ஒன்றாக இருக்கிறது என்று, மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம் கூறியுள்ளார்.
ஆகக் கடைசியாக நாடு தழுவிய அளவில் 1,700 வெள்ளி குறைந்தபட்ச சம்பளம் குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், புவியியல் பகுதிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் உட்பட, கடந்த ஆண்டு காலகட்டத்தில் தமது அமைச்சின் நுட்பக் குழு பல்வேறு அம்சங்களை பரிசீலித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இப்போதைக்கு, நாடு தழுவிய அளவிலான இச்சம்பளம் மிகவும் நியாயமானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்று. பினாங்கில் உள்ள சீன நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜசெகவின் சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது சிம் குறிப்பிட்டார்.
உள்ளூர் பொருளாதார நிகழ்வுகளை மிகவும் திறம்பட பிரதிபலிக்கும் வகையில், எதிர்கால குறைந்தபட்ச ஊதிய மாற்றங்களுக்கான மாநில அடிப்படையிலான அல்லது வட்டார சம்பள மாதிரிகளை மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று. மலேசிய உற்பத்தியாளர்களின் சம்மேளனம் (எஃப்எம்எம்) கடந்த வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த குறைந்தபட்ச 1,700 வெள்ளி சம்பள முறை அமலாக்கம், மாநிலங்கள் முழுமையிலும் செயல்படும் தொழில்துறைகளுக்கு சீரற்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற கவலையில் சம்மேளனம் இருப்பதாக அதன் தலைவர் சோ தியான் லாய் தெரிவித்திருந்தார். அது குறித்து கருத்துரைத்த சிம், எஃப்எம்எம்மின் பரிந்துரை புதியது அல்ல என்றும் குறுகிய காலமாக இருந்த போதிலும், அத்தகைய முறை இதற்கு முன்னர் அமல்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.
எனினும், குறைந்தபட்ச சம்பள மறுஆய்வுக்கான வழிமுறைகள் மீதாக சீராய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் தமது அமைச்சு தொடர்ந்து கருத்தில் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய குறைந்தபட்ச சம்பள விகிதத்தை அனைத்து மூன்று தரப்புகளும் ஏற்றுக் கொண்டிருப்பதாக, அரசாங்கம், முதலாளிமார்கள் மற்றும் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஓர் அரசாங்க நிறுவனமான தேசிய ஊதிய ஆலோசனை மன்றத் தலைவரிடமிருந்தும் சிம் சாதகமான பதிலை பெற்றிருக்கின்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *