குடிபோதையில் நிகழும் வாகன விபத்திற்கு மதுபானம் விற்பவர்களும் பொறுப்பேற்க வேண்டும்! - PKR இளைஞர் பிரிவு பரிந்துரை
- Shan Siva
- 01 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 1: குடிபோதையில் வாகனம்
ஓட்டுபவர்களுக்கு மதுபானங்களை வழங்கும் அல்லது விற்கும் வணிக வளாகங்கள், சாலைப் பயனாளிகளுக்கு ஆபத்தை
விளைவிப்பதில் அவற்றின் பங்கிற்கு சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று
பிகேஆர் இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
பிகேஆர் இளைஞர் பிரிவின் அரசு சாரா அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள்
பணியகத்தின் தலைவர் ஷஃபிக் இக்ராம் அப்துல்லா, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை வெறும் தனிப்பட்ட குற்றமாகக்
கருதாமல், பொதுப் பாதுகாப்பிற்கு ஒரு அமைப்பு
ரீதியான அச்சுறுத்தலாகக் கருத வேண்டும் என்று கூறினார்.
மதுபானம் விற்கும் வளாகங்களுக்கான வணிக உரிமங்களில், "மதுபானக் கடைப் பொறுப்பு" என்ற
புதிய விதியை உள்ளாட்சி அமைப்புகள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், இது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு
அதிகமாக மதுபானம் வழங்கினால் அதன் உரிமையாளர்களை சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கச்
செய்யும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சாலைப் பாதுகாப்பு
நிதிக்கு, மதுபான உற்பத்தியாளர்கள் பங்களிக்க
வேண்டும் என்றும் ஷஃபிக் கூறினார்.
மேலும், மளிகை மற்றும் பிற கடைகளில் வாடிக்கையாளர்கள் மதுபானம் வாங்குவதற்கான நேரங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் தடுக்கக்கூடிய
அலட்சியத்தால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பும் நாட்டின் மனித மூலதனத்திற்கு ஒரு
பெரும் இழப்பாகும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



