ஈப்போ காவல் வாகனம் - கெலிசா மோதிய விபத்தில் சிறுமி பலி!
- Shan Siva
- 11 Feb, 2026
ஈப்போ, பிப் 11: ஈப்போவில் நேற்று பிற்பகல் நடந்த சாலை விபத்தில், மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈப்போ–லுமுட் சாலையில், புஞ்சாக் ஜெலாப்பாங் அருகே, நேற்று பிற்பகல் 3.35 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக மாவட்ட காவல் துறை தலைவர் உதவி ஆணையர் அபாங் ஸைனல் அபிதின் அபாங் அக்மட் தெரிவித்தார்.
இந்த விபத்தில், ஹோண்டா சிவிக் காவல் வாகனமும், பெரோடுவா கெலிசா காரும் எதிர்திசைகளில் பயணித்தபோது மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆரம்ப விசாரணையில், ஜெலாப்பாங் பகுதியில் இருந்து லுமுட் நோக்கிச் சென்ற பெரோடுவா கெலிசா கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை பாதைக்கு சென்று, காவல் வாகனத்தின் மீது மோதியதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில், காவல் வாகனத்தை ஓட்டிய போலீஸ் அதிகாரிக்கு இரு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு இடது தோள்பட்டை எலும்பு முறிவு மற்றும் வலது கண் இமை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
பெரோடுவா கெலிசா காரை ஓட்டிய 34 வயது பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருடன் பயணித்த மூன்று வயது மகள் கடுமையாக காயமடைந்து, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி, அந்த சிறுமி மாலை 4.32 மணிக்கு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் — அலட்சியமான அல்லது ஆபத்தான ஓட்டுதலால் மரணம் ஏற்படுத்தியதாக — விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



