இந்து ஆலய விவகாரம்: முழுமையான தீர்வு அவசியம் - வழக்கறிஞர் டத்தோ சி.முருகேசன் வலியுறுத்து!

top-news

கோலாலம்பூர், பிப். 10-

மலேசியாவில் உள்ள இந்து சமூகத்தினர், அனுமதி இன்றி கட்டப்பட்ட ஆலயங்களையோ அல்லது பிறரின் நிலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களையோ ஆதரிப்பதில்லை என மூத்த வழக்கறிஞர் டத்தோ சி.முருகேசன்  தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டங்களையும் நில உரிமைகளையும் மதிப்பதே பெரும்பான்மையான இந்து சமூகத்தின் நிலைப்பாடாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், அனுமதி இல்லாத ஆலயங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள பிரதமரின் அறிவுறுத்தல், இந்தப் பிரச்சினையின் அடிப்படை காரணங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். இந்து வழிபாட்டுத் தலங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் வரலாற்றுப் பின்னணி, அனுமதி வழங்கலில் உள்ள அமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் தெளிவான கொள்கை இல்லாமை ஆகிய கோணங்களில் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரலாற்று ரீதியாக, தோட்டத் தொழிலாளர்கள், கேடிஎம்  பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர், அக்காலத்தில் நில உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அனுமதியுடன் ஆலயங்களை அமைத்திருந்தனர். ஆனால், அந்த நிலங்கள் மேம்பாட்டுக்காக விற்கப்பட்டபோது, ஆலயத் தளங்களும் நிபந்தனையின்றி புதிய உரிமையாளர்களுக்கு மாற்றப்பட்டன. இதன் காரணமாக, பல ஆலயங்கள் நில உரிமை பெற முடியாமல் அல்லது இடம் மாற்றப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

புதிய வீட்டு வளர்ச்சித் திட்டங்களில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கும், இஸ்லாமியமல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கும்  இட ஒதுக்கீடு செய்யப்படுவதால், இஸ்லாமியமல்லாத மதத்தினர் ஒரே இடத்திற்காக போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், எண்ணிக்கையில் குறைவான இந்து சமூகத்தினர் பெரும்பாலும் ஆலயத் தளம் பெறத் தவறுவதோடு தளம் கிடைப்பதில் சிக்கலையும் எதிர்நோக்குகின்றனர்.

மேலும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில்கூட ஆலயங்களை அமைப்பதற்கு அனுமதி பெறுவது மிகக் கடினம் என பல ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பல்வேறு காரணங்களை முன்வைத்து அனுமதிகள் தாமதப்படுத்தப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. சில அதிகாரிகள், தங்களின் தனிப்பட்ட மத நம்பிக்கைகள் காரணமாக அனுமதி வழங்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், பொறுப்பற்ற முறையில் ஆலயங்களை அமைக்கும் சிலரை இந்து சமூகமே ஆதரிப்பதில்லை. இருப்பினும், இதனைத் தடுக்க சட்டபூர்வ அதிகாரம் கொண்ட அமைப்பு இல்லாததே முக்கிய குறையாகும். மலேசிய இந்து சங்கம் ஆலோசனை வழங்கும் பங்கு மட்டுமே வகிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, பிரதமர் தனது உத்தரவை திரும்பப் பெற்று, இந்து சமூகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இந்து அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, அனைத்துத் தரப்புக்கும் ஏற்ற முழுமையான தீர்வை காண வேண்டும் என டத்தோ சி.முருகேசன்  வலியுறுத்தினார். ஏனெனில் இந்த விவகாரம் ஒரு சில மதவெறியர்களால்  இன ஒற்றுமையைச் சீர்குலைக்க பயன்படுத்தப்படுவதால் பிரதமர் இவ்விவகாரத்தில் நல்லதொரு முடிவை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்நாட்டின் குடிமகன்களான இந்து சமூகத்தினர் அமைதியையும், நியாயமான சட்ட நடைமுறையையுமே விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *