தீர்க்க சுமங்கலி வரம் பெற காரடையான் நோன்பு

top-news
FREE WEBSITE AD

காரடையான் நோன்பு என்பது பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் நன்னாளில் (மீன சங்கராந்தி) நோற்கும் ஒரு சிறப்பு விரதமாகும். சாவித்திரி தேவி எமனிடமிருந்து தன் கணவன் சத்தியவானை மீட்டதை நினைவுகூரும் வகையில், சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் சரடு மாற்றிக்கொண்டு, கார அடை மற்றும் இனிப்பு அடை படைத்து வழிபடுகின்றனர். இந்த விரதம் மங்கல விரதம் என பெண்களால் போற்றப்படும் விரதமாகும். இழந்தவை அனைத்தையும் மீட்டுத் தரும் மகா உன்னதமான விரதம் ஆகும்.காரடையான் நோன்பு விரதம் கடைபிடிப்பவர்களுக்கு அம்பிகையின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. காரடையான் நோன்பு எப்படி கடைபிடிக்க வேண்டும், எந்த நேரத்தில் வழிபட வேண்டும். இது சாவித்திரி விரதம், கெளரி விரதம், கெளரி நோன்பு, காமாட்சி விரதம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தை திருமணமான பெண்கள் மட்டுமின்றி, நல்ல கணவன் அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு திருமணமாகாத கன்னிப் பெண்களும் அனுஷ்டிக்கலாம். மிக உத்தமமான இந்த விரதம் மிக எளிமையானதாக இருந்தாலும், அதிக சக்தி வாய்ந்த விரதமாகும். 

காரடையான் நோன்பு உருவான கதை:

சாவித்திரி, தன்னுடைய கணவன் சத்தியவானின் உயிரை, எமனிடம் போராடி மீட்டு வருவதற்கு அவளுக்கு ஆற்றலை தந்த விரதமாகும். விதி வசத்தால் தன்னுடைய நாடு, செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து காட்டில் வாழும் நிலை சத்தியவானுக்கும், சாவித்திரிக்கும் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தன்னுடைய கணவரின் ஆயுள் பற்றிய ரகசியத்தை தெரிந்து கொண்ட சாவிரித்திரி, அன்னை கெளரியை வேண்டி, காட்டில் தனக்கு கிடைத்த காராமணி, அரிசி, உருகாத வெண்ணெய் உள்ளிட்ட எளிமையான பொருட்களை படைத்து வழிபாடு செய்து வந்தால். அந்த விரதம் மற்றும் பூஜையின் பலனாக யார் கண்ணுக்கும் தெரியாத எமன், சாவித்திரியின் கண்களுக்கு மட்டும் தெரிந்தார். 

கணவரின் உயிரை மீட்க சாவிரித்திரி கேட்ட வரம் :
தன்னுடைய கணவரின் உயிரை எமன் எடுத்துச் செல்வதை கண்ட சாவிரித்திரி, எமனுடன் வாதிட்டு, பல உலகங்களைக் கடந்து இறுதியாக எமலோகத்தின் வாசல் வரை சென்றாள். மனித உடலுடன் எமலோகம் வரும் அளவிற்கு ஆற்றல் பெற்ற அந்த பெண்ணை கண்டு ஆச்சரியப்பட்ட எமன், கணவரின் உயிரை தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார். இதைக் கேட்ட சாவிரித்திரி, முதலில் தன்னுடைய கணவரின் தாய், தந்தைக்கு இழந்த கண் பார்வை வர வேண்டும் என்றும், பிறகு இழந்த தங்கள் ராஜ்ஜியம் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றும் கேட்டாள். கடைசியாக, தான் தீவிர பதிவிரதை என்பதால் தனக்கு நல்ல குழந்தை பேறு வேண்டும் என்றும் கேட்டாள். சாவித்திரியை எப்படியாவது அங்கிருந்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எமன், அவள் கேட்ட வரங்கள் அனைத்தையும் தருவதாக வாக்களித்தார். வரத்தை அளித்த பிறகு தான், கடைசியாக கேட்ட வரத்தில் சாவிரித்திரி எவ்வளவு நுட்பமாக தனது கணவரின் உயிரை கேட்டுள்ளாள் என்பதை எமன் புரிந்து கொண்டார். இருந்தாலும் தான் அளித்த வரத்தை திரும்ப பெற முடியாமல் சாவிரித்திரிக்கு, சத்தியவானின் உயிரை திரும்ப அளித்தார். இந்த விரதம் மங்கல விரதம் என பெண்களால் போற்றப்படும் விரதமாகும். இழந்தவை அனைத்தையும் மீட்டுத் தரும் 
காரடையான் நோன்பு விரதம் கடைபிடிப்பவர்களுக்கு அம்பிகையின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

காரடையான் நோன்பு வழிபாட்டு முறை :

 காரடையான் நோன்பு இருப்பவர்கள் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு, கார அடை மற்றும் இனிப்பு அடை செய்து, படைத்து வழிபட வேண்டும். இலை போட்டு நைவேத்தியம் படைப்பதாக இருந்தால் 4 வாழை இலைகள் படைத்து வழிபட வேண்டும். ஒருவேளை தட்டில் வைத்து படைப்பதாக இருந்தால் கார அடை, இனிப்பு அடை, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, உருகாத வெண்ணெய் வைத்து படைத்து வழிபட வேண்டும்.

தாலி சரடு மாற்றும் முறை :
தாலி சரடு மாற்ற வேண்டிய அவசியம் இருக்கும் பெண்கள் மஞ்சள் கிழங்குடன் தாலி கயிறை கட்டி, அம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்டு பிறகு கணவரின் கைகளாலேயோ அல்லது மூத்த சுமங்கலிகள் கைகளாலேயோ அல்லது தாங்களாகவோ கட்டிக் கொள்ளலாம். சரடு சமீபத்தில் தான் மாற்றினோம் என்பவர்கள் மஞ்சள் நூலில் இரண்டு பூக்களை மட்டும் வைத்து கட்டி, அம்பிகையிடம் வைத்து வேண்டிக் கொண்டு, அதை கழுத்திலோ அல்லது கைகளிலோ கட்டிக் கொள்ளலாம். அன்றைய தினம் வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைத்து மஞ்சள், குங்குமம், தாலி சரடு வைத்துக் கொடுப்பது மிகவும் நல்லது.

 இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை  காரடையான் நோன்பு துவங்குகிறது. 14ம் தேதி காலையிலேயே பூஜை செய்து, தாலி சரடு அல்லது நோம்பு கயிற்றை கட்டிக் கொண்டு விரதம் இருக்கலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் :

தமிழ் மந்திரம் :
உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்
சமஸ்கிருத மந்திரம் :
தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா

பூஜை மற்றும் சரடு மாற்றுவதற்கான நேரம் :

மார்ச் 14ம் தேதி காலை 06.48 மணி துவங்கி, மார்ச் 15ம் தேதி அதிகாலை 01.08 வரை இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அன்றைய தினம் சுப முகூர்த்த வேளையில் பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கமும் உள்ளது. சிலர் காரடையான் நோன்பு அன்று சூரிய உதயம் துவங்கி, சூரியன் மறையும் வரை நோன்பு கடைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாளில் விரதம் இருக்கும் பெண்கள், அன்னை காமாட்சியின் அருளால் தீர்க்க சுமங்கலி வரம் பெறுவதற்கு விரதம் இருப்பதுடன், "உருகாத வெண்ணையும், ஓர் அடையும் நோற்றுஉனக்கு நான் வைத்தேன், எந்நாளும் என் கணவர் என்னை விட்டு நீங்காத அருள் தருவாய்" என்ற மந்திரத்தை சொல்லி வழபட வேண்டும். 

காரடையான் நோன்பு அன்று செய்ய வேண்டியவை :
காரடையான் நோன்பு அன்று அதிகாலையிலேயே எழுந்து, மஞ்சள் பூசி குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். அன்றைய தினம் முழு உபவாசமாக இருந்து விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள், புளிப்பு, உப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். வீட்டில் உள்ள காமாட்சி அம்மன் படத்திற்கு முன் மஞ்சள் சரடை வைத்து, விளக்கேற்றி, வழிபாடுகள், பூஜைகளை செய்ய வேண்டும். பிறகு மஞ்சள் சரடை எடுத்து கணவரின் கைகளால் கொடுத்து கட்டிக் கொள்ளலாம். கணவர் வெளியூர் சென்றிருந்தால் வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகள் கையில் கொடுத்து கட்டிக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெறலாம். இந்த நாளில் அக்கம் பக்கத்தில் உள்ள சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கலாம். மஞ்சள், குங்குமம், பூ, தாலி சரடு வாங்கி தானமாக கொடுக்கலாம்.

:- லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *