உலகத் தமிழ் இலக்கியப் பேரவையின் ஹைக்கூப் போட்டியில் கே. பாலமுருகன் வெற்றி

top-news
FREE WEBSITE AD

தி.கிரிஷன்

கோலாலம்பூர், ஜூன் 15-
விழுப்புரத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் உலகத் தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய உலகலாவிய ஹைக்கூப் போட்டியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் கே. பாலமுருகனின் ஹைக்கூ கவிதை வெற்றிப் பெற்று இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஹைக்கூ படைப்பாளர்கள் தங்களது படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றுள் கே. பாலமுருகனின் ஹைக்கூ கவிதை நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுக்குரிய படைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் சிறுகதை, நாவல், கட்டுரை, சிறார் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னுடைய தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் கே. பாலமுருகன், கடந்த 2024ஆம் ஆண்டு முதல் ஹைக்கூ இலக்கியத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஜப்பானியக் கவிதை வடிவமான ஹைக்கூவின் நுணுக்கங்களையும் அதன் சுருக்கமான வெளிப்பாட்டு ஆற்றலையும் ஆழமாக உள்வாங்கி தொடர்ந்து படைப்புகளை எழுதி வருவதன் பலனாக, பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று வருகிறார்.

உலகத் தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய உலகலாவிய ஹைக்கூப் போட்டியில் அவர் வெற்றிபெறுவது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். தொடர்ந்து ஒரே இலக்கிய வடிவத்தில் தன்னுடைய படைப்பாற்றலையும் தரத்தையும் நிலைநிறுத்தி வருவது அவரது அர்ப்பணிப்பையும் இலக்கிய ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது.

இதற்கு முன்னர், மித்ரா ஹைக்கூ இலக்கிய அமைப்பு நடத்திய ஹைக்கூப் போட்டியிலும், புகழ்பெற்ற கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக நடத்தப்பட்ட ஹைக்கூப் போட்டியிலும் அவர் வெற்றிபெற்று கவனிக்கத்தக்க அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். இவ்வெற்றிகள் அவரது ஹைக்கூப் படைப்புகள் வாசகர்களிடமும் இலக்கிய விமர்சகர்களிடமும் பெற்றுள்ள வரவேற்பை உறுதிப்படுத்துகின்றன.

ஹைக்கூ இலக்கியம் தமிழ் மொழியில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இக்காலகட்டத்தில், மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளராக கே. பாலமுருகன் உலகளாவிய அளவில் தமிழின் கவிதை மரபை முன்னெடுத்துச் செல்வது பாராட்டுக்குரியதாகும். அவரது இச்சாதனை மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமன்றி, ஹைக்கூ இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இளம் படைப்பாளர்களுக்கும் புதிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளது.

உலக அரங்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கே. பாலமுருகனுக்கு இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *