கோலாலம்பூர், ஜன. 21-
சரவாக் மாநிலத்தின் உள்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான அடையாள ஆவணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு (PPK) மூலம், உள்துறை அமைச்சு (KDN) மொத்தம் 12,509 அடையாள ஆவண விண்ணப்பங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுத்தின் நசூதின் இஸ்மாயில் , 2023 ஜூலை மாதத்திலிருந்து சிறப்பு பணிக்குழு மொத்தம் 13,224 விண்ணப்பங்களைச் சேகரித்துள்ளதாகவும், அவற்றில் மீதமுள்ள 715 விண்ணப்பங்கள் தற்போது செயல்முறையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விண்ணப்பங்களும் விரைவில் முழுமையாகத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
மலேசியா ஒரு முன்னேறிய, வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், இன்னும் சில குடிமக்களிடம் பிறப்புச் சான்றிதழ் அல்லது மைகாட் (MyKad) இல்லாத நிலை தொடர்வதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால், அவர்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை சேவைகளைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறினார்.
“அதிகாரிகள் அலுவலகங்களில் காத்திருக்கவில்லை. அவர்கள் நேரடியாக நீண்ட வீடுகளுக்குச் சென்று, ஆவணங்கள் இல்லாதவர்களைஅடையாளம் கண்டனர்,” என அவர் விளக்கினார். அடையாள ஆவணங்கள் இல்லாததால், பள்ளிக்குச் செல்லவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் அதிக செலவு, சிரமம் ஏற்படுகிறது என்றும் அவர் நாடாளுமன்றத்தின் கேள்வி–பதில் அமர்வில் தெரிவித்தார்.



