சங்கடஹர சதுர்த்தி பலன்கள்
- Surendran Sumdraraj
- 06 Mar, 2026
சதுர்த்தி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்
சதுர்த்தி விரதம் என்பது விநாயக பெருமானை வழிபடுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு புனிதமான விரதம். இந்த விரதத்தை மேற்கொள்வதால், நமது வாழ்வில் நேரும் சங்கடங்கள் நீங்கி, செல்வம், செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சதுர்த்தி என்றால் என்ன?
சந்திரனின் இயக்கத்தைப் பொருத்து கணிக்கப்படும் திதி சதுர்த்தி எனப்படும். அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்துவரும் நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். இந்த நாளில் விநாயகர் பூஜை மற்றும் விரதம் கடைப்பிடிப்பது சிறப்பு நன்மைகளை வழங்கும் என நம்பப்படுகிறது.
சதுர்த்தி விரதம் யாரெல்லாம் இருக்கலாம்?
சதுர்த்தி விரதத்தை ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் கடைப்பிடிக்கலாம். எந்த வயதினரும், பக்தி மற்றும் மனநிம்மதியுடன் இந்த விரதத்தை செய்யலாம். விநாயகரின் அருள் பெற விரும்பும் அனைவருக்கும் இது உகந்தது. சுகம், செல்வம், மற்றும் தடைகள் நீங்கக் கோரி விரதம் இருந்தால் நன்மைகள் கிடைக்கும்.
சதுர்த்தி விரதம் கடைபிடிக்கும் முறை
சதுர்த்தியன்று விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்குவது சிறந்தது. இல்லையெனில், வீட்டில் விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு மலர்களால் மாலையிட்டு வழிபாடு செய்து விரதத்தை தொடங்கலாம். நாள் முழுவதும் விரதம் இருக்கலாம்; முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
எந்த நேரத்தில் விரதத்தை துவங்க வேண்டும்?
சதுர்த்தி திதி துவங்கியதில் இருந்து விரதத்தை துவங்கலாம். அல்லது சதுர்த்தியன்று காலையிலேயே விரதத்தை துவங்க வேண்டும். மாலையில் விநாயகர் கோவிலில் நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
என்ன நைவேத்தியம் படைக்கலாம் ?
விநாயகருக்கு கொழுக்கட்டை, அவல், பொரி, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற நெய்வேத்தியங்கள் மிகவும் பிடித்தவை. இவற்றில் எந்த ஒன்றை வேண்டுமானாலும், அல்லது முடிந்தால் அனைத்தையும் படைத்து, விநாயகரை வழிபடலாம்.
சதுர்த்தி அன்று எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?
சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் வீட்டில் விநாயகர் படத்தின் முன் விளக்கேற்றி வழிபட வேண்டும். மலர்கள் மற்றும் அருகம்புல் மாலையால் விநாயகரை அலங்கரித்து, விநாயகருக்கு உரிய மந்திரங்கள் அல்லது பாடல்களை பாடி, தீபம் மற்றும் தூபத்தால் ஆராதனை செய்து பூஜையை செய்யலாம். மேலும், சங்கு விநாயகரை வைத்து வழிபட்டால் மிகச் சிறந்த நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
தானம் செய்தல்
பூஜை முடிந்த பிறகு, தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை வீட்டின் அருகிலுள்ள குழந்தைகள் அல்லது கோவிலில் வரும் பக்தர்களுக்கு வழங்கலாம். சதுர்த்தி அன்று பிரசாதம் வழங்குதல் புனிதமாகக் கருதப்படுகிறது. மேலும், அந்த நாளில் தானம் செய்வது மிகுந்த புன்னியத்தை அளிக்கும் என்பர், இது வாழ்வில் நன்மைகளை கொண்டு வர உதவும்.
சதுர்த்தி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால், வாழ்க்கையில் உள்ள குழப்பங்கள் அகலும், கஷ்டங்கள் மற்றும் கிரக தோஷங்கள் விலகும். சங்கடங்கள், காரிய தடை நீங்கி, சகல விதமான செழிப்பு மற்றும் செல்வங்கள் வாழ்க்கையில் கிட்டும். இதனால் மனநிம்மதியும் ஆன்மிக வளமும் வளர்ச்சியடையும்.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



