ஜூரு தொழிற்பகுதியில் பயங்கர தீ விபத்து 2 தொழிற்சாலைகள், தொழிலாளர் விடுதி தீக்கிரை
- Surendran Sumdraraj
- 25 May, 2026
புக்கிட் மெர்தாஜாம், மே 25-
சிம்பாங் அம்பாட் அருகே உள்ள ஜூரு இலகுரக தொழிற்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு தொழிற்சாலை கட்டிடங்களும் தொழிலாளர் விடுதியும் தீக்கிரையாகின. சம்பவத்தின் போது உள்ளே இருந்த 7 தொழிலாளர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
பினாங்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் John Sagun Francis கூறுகையில், இரவு 8.25 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆரோக்கிய பான உற்பத்தி தொழிற்சாலை மற்றும் சமையலறை அலமாரி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளிட்ட இரண்டு இணைந்த தொழிற்சாலை கட்டிடங்கள் இருந்ததாகவும், தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியும் தீயில் சிக்கியதாகவும் அவர் கூறினார்.
“சம்பவம் நடைபெற்ற போது இரண்டு உள்ளூர் ஆண்கள், மியான்மரை சேர்ந்த ஒருவர், வியட்நாமை சேர்ந்த ஒருவர் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மூவர் என மொத்தம் 7 தொழிலாளர்கள் உள்ளே இருந்தனர். அனைவரும் தாங்களாகவே வெளியேறி உயிர் தப்பினர்,” என்று அவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், பல தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கனமூட்டமான புகை மற்றும் எரிவாயு வெடிப்பு அபாயம் காரணமாக சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாதது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



