தெருநாய்கள் தாக்கிய 2 வயது சிறுமி – சிகிச்சை செலவை முழுமையாக ஏற்கும் ஜோகூர் அரசு

top-news
FREE WEBSITE AD

ஜோகூர் பாரு, செப். 8 –

பத்து பாஹாட், கம்போங் தம்பாக் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஐந்து தெருநாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்த 2 வயது சிறுமி நூர் ஹைரா வாஃபிகா முகமது ஹமிசியின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு செலவுகளை ஜோகூர் மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில சமய விவகாரக் குழுத் தலைவர் முகமது பாரிட் முகமது காலித் இதனை தெரிவித்தார்.

சிறுமி சிகிச்சை பெற்று வரும் காலம் முழுவதும் அவரது குடும்பத்தினர் நிதிச் சுமையைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், தேவையான அனைத்து மருத்துவச் செலவுகளையும் மாநில நிர்வாகம் ஏற்கும் என்றும் அவர் கூறினார்.

“மருத்துவர்கள் தேவையான சிகிச்சையைப் பரிந்துரைத்து, பெற்றோர் அதற்கு ஒப்புதல் அளித்தால் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும். அதற்கான செலவை மாநில அரசு ஏற்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சிகிச்சைச் செலவுகள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை எளிதாக்க மருத்துவமனையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காக சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நூர் ஹைராவை நேரில் சந்தித்த பின்னர் முகமது பாரிட் இந்தத் தகவலை வெளியிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *