ரோஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் ஆதார விசாரணைக்குத் தற்காலிக தடை
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
புத்ராஜெயா, செப். 17-
சரவாக் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட RM1.25 பில்லியன் மதிப்பிலான சூரிய ஆற்றல் கலப்பு திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில், டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் மேல்முறையீட்டுக்காக முக்கிய அரசுத் தரப்பு சாட்சியிடமிருந்து கூடுதல் ஆதாரங்களைப் பெறும் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
டத்தோ அஸஹாரி கமால் ரம்லி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசுத் தரப்பின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
துணை அரசு வழக்கறிஞர் முகமட் அஸ்னாவி அபு ஹனிபா, விசாரணையை ஒத்திவைக்க கோரி அரசுத் தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு ரோஸ்மா தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரின் ஒப்புதலுடன், மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 1-ஆம் தேதி பிறப்பித்த கூடுதல் ஆதாரங்களைப் பதிவு செய்யும் உத்தரவு, அரசுத் தரப்பின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



