மலாக்கா துப்பாக்கிச் சூடு: மூன்று இளைஞர்களைச் சுட்டுக்கொன்ற போலீசாரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் – உள்துறை அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 11 Dec, 2025
புத்ராஜெயா, டிச. 11-
கடந்த நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் உறுப்பினர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதீன் இஸ்மாயில் தெரிவித்தார்.
புக்கிட் அமான் தலைமையகம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு, முழுமையான, நடுநிலையான விசாரணை நடத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.
“ஆடியோ பதிவு உள்ளிட்ட குடும்பத்தினர் தரப்பில் எழுப்பப்பட்ட அனைத்துப் புகார்களும் விசாரணையில் சேர்க்கப்படும். சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸாரின் வாக்குமூலமும் கட்டாயம் பதிவு செய்யப்படும். இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு விசாரணையின் பகுதி” என்று அமைச்சர் கூறினார்.
குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தலைமையிலான குழு, போலீஸாரின் நடைமுறை விதிகளின்படியே விசாரணையை மேற்கொள்ளும் என்றும், எந்த முடிவுக்கும் முன்கூட்டியே செல்ல மாட்டோம் என்றும் சைபுடின் வலியுறுத்தினார்.
இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
விசாரணை முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என அமைச்சர் மீண்டும் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



