இப்பிறவி பாவங்களை இப்பிறவியிலேயே தீர்க்கும் ‘இம்மையில் நன்மை தருவார்’
- Surendran Sumdraraj
- 22 May, 2026
இப்பிறவியில் செய்த பாவங்களை போக்கி நன்மை அளிக்கிறார், இம்மையில் நன்மை தருவார். மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் மண் (பிருத்வி) தலம் இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற திருவிளையாடல் நிகழ்ந்ததும், அதன் திருக்கண் மண்டபமாகவும் இக்கோயில் விளங்குகிறது. எல்லா கோயில்களுக்கும் சித்தர்களே ஆதாரம். அதேபோல், இந்த கோயிலிலும் வல்லப சித்தரே ஆதாரமாக இருக்கிறார்.
பிரம்மனும், திருமாலும், சக்தியும், தேவர்களும் சிவனை பூஜித்து நலம் பெற்றிருப்பதை புராணங்கள் சொல்கின்றன. ஆனால், சிவனே, சிவமாகிய லிங்கத்தை வழிபட்ட பெருமையுடைய தலம் இது. இத்தலத்தில் சிவன் தன்னையே இங்கு லிங்கமாக பிரதிஷ்டை செய்து, அதை தானே வழிபட்டதாக புராணம் உள்ளது. இவரை வணங்கினால் இப்பிறப்பில் நாம் செய்த பாவமெல்லாம் நீக்கி, முக்தி எனும் சுகத்தை இந்த பிறவியிலேயே அளிக்கிறார். அதனால்தான் ‘இம்மையிலும் நன்மை தருவார்’ என அழைக்கப்படுகிறார். இங்கு மூலவராக உள்ள லிங்கத்தின் பின்னால் சிவனே அம்மனுடன் சிவபூஜை செய்வதுபோல் உருவ அமைப்பு உள்ளது தனிச்சிறப்பு. இங்கு, நடுவூர் நாயகி என்ற பெயரில் மத்தியபுரி அம்மனும் அருள்பாலிக்கிறார்.மதுரையை ஆண்ட மீனாட்சி திக்குவிஜயம் செய்து மூன்று உலகங்களையும் வென்றார். முடிவில், கயிலாயத்துக்குச் செல்கிறார். அங்கு உலகின் நாயகனான சிவனை சந்தித்த உடனேயே சக்தியின் கோபம் தணிகிறது. ஏற்கெனவே நிச்சயித்தபடி, சுந்தரேசுவரருக்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடக்கிறது. இதனால், மதுரை சுந்தரேசுவரர் எட்டு மாதம், மீனாட்சி நான்கு மாதம் ஆட்சி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. நாடாளும் மன்னன் முதல் ஈசன் வரை ஆட்சி பொறுப்பேற்கும் முன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது மரபு. அந்த மரபைத் தானே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, சுந்தரேசுவரர் தனது ஆத்மாவையே லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து, அதற்குத் தானே பூஜை செய்து பின்பு ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்வாறு சுந்தரேசுவரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், சுந்தரபாண்டிய மன்னனான அவருக்கே வரம் அருளிய லிங்கமே இம்மையிலும் நன்மை தருவார் என அழைக்கப்படுகிறது. சிறப்புக்குரிய இத்தலத்து இறைவனை வணங்கினால், இம்மை (இப்பிறவி), மறுமை (வரும் பிறவி), பிணி (பிறவி எனும் நோய்) இவற்றையெல்லாம் நீக்கி முக்தி கிடைக்கும். மேற்கு நோக்கிய சிவாலயம் என்பதால், பக்தர்களின் பிரார்த்தனை உடனுக்குடன் நிறைவேறுகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு வந்து வழிபட்டதாகவும் தகவல் உண்டு.எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. சுவாமி சந்நிதியின் வலதுபுறம் தனி சந்நிதியில் தெற்கு நோக்கிய அன்னை நடுவூர்நாயகி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னைக்கு மத்தியபுரி அம்மன் என்ற திருநாமமும் உள்ளது.
மீனாட்சியம்மன் கோவிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்னதாக சிவன்- அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருள்வார்கள். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம் ஆகும்.
பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.
ஆலயத்தில் அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன் வல்லப சித்தராக வந்து கல்யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார்.
பொதுவாக செம்பில் தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்புடன் காணப்படுகிறது.
மத்தியபுரி நாயகி சன்னிதிக்கு பின்புறம், அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.
இக்கோவிலில் பூஜையின் போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். இங்கு லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.
மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலம் ஆகும்.
கோவில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் வீற்றிருந்து அருள்கிறார். உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் மிளகு ரசம், காரமான புளியோதரை சாதம் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.
“பூலோக கைலாயம்’ என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
சுவாமிக்கு வஸ்திரம் வழங்கினால் பெரும் புண்ணியமும், நெய் தீபம் ஏற்றினால் பசுதானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். அன்னாபிஷேகம் செய்தால் கயிலாய வாழ்வு கிட்டும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் ஆலய கும்பாபிஷேகம் செய்த பலன் கிட்டும், அம்பாளையும், இறைவனையும் வலம் வந்து வணங்கினால் வீடுபேறு கிடைக்கும். இத்தலத்து அம்பாளை வழிபட்டால், திருமண வரம், குழந்தை வரம் கிட்டும். கல்வி வரம், எடுத்த காரியம் நடைபெற இத்தலத்தில் வழிபடலாம்.
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு இத்தலத்தில் பால் அபிஷேகம் செய்தல் சிறப்பு. தேன், எண்ணெய், இளநீர், சந்தனம், பன்னீர், நல்லெண்ணெய் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செய்கின்றனர். அம்பாளுக்கு புடவை சாத்துகின்றனர். மதுரையின் மையப் பகுதியில், அதாவது பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள இத்தகைய சிறப்புமிக்க தலம், சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



