சித்ரா பௌர்ணமியின் தெய்வீக ரகசியம் ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு
- Surendran Sumdraraj
- 01 May, 2026
பௌர்ணமி என்பது தமிழ் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி நாள் (ஏப்ரல்-மே) ஆகும். இது கர்மவினைகளைக் குறைக்கும் மற்றும் பாவ-புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தரை வழிபடும் மிகச்சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் முழு நிலவு ஒளியில் விரதமிருந்து, சித்ரகுப்தர், சிவன் மற்றும் முருகனை வழிபடுவது தலையெழுத்தையே மாற்றும் என நம்பப்படுகிறது. சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் வரும் முழு நிலவு நாளாகும். இந்நாளில் எமதர்மனின் கணக்கப்பிள்ளையான சித்ரகுப்தரை வழிபடுவது முதன்மையானது. மக்கள் விரதமிருந்து சித்ரகுப்தருக்குப் பிடித்தமான சித்ரான்னங்களை (எலுமிச்சை, தேங்காய் சாதம்) படைத்து வழிபடுவர். நம் பாவ-புண்ணியக் கணக்குகள் நேர்மையாக இருக்கவும், செய்த பிழைகள் நீங்கவும் வேண்டிக்கொள்ளும் ஒரு புண்ணிய தினமாக இது கருதப்படுகிறது.
வருடத்தில் வரும் 12 பெளர்ணமிகளில் மிகவும் சிறப்பும், தனித்துவமானதுமான நாளாக கருதப்படுவது சித்ரா பௌர்ணமி. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு, சாதாரண பூஜை அல்ல. அது நம் வாழ்க்கையின் பாவ–புண்ணிய கணக்கை சீர்செய்யும் ஒரு அற்புதமான நாளாகும். எமதர்மனின் துணையாக, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரின் செய்கைகளையும் பதிவு செய்யும் சித்ரகுப்தரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக இந்த நாள் கருதப்படுகிறது.புராணங்களின் படி, ஒரு நாள் கயிலாயத்தில், பார்வதி தேவி பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையை ஓவியமாக வரைகிறாள். அந்த ஓவியம் உயிரோடு இருப்பது போல பிரகாசித்தது. அந்த சமயம் அங்கு வந்த சிவபெருமான், அந்த ஓவியத்தை பார்த்து மகிழ்ந்தார். அவருக்கு உடனே ஒரு நினைவு வந்தது. உலக உயிர்களின் ஆயுள் முடிவை நிர்ணயித்து, அவர்களின் கர்மத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் எமதர்மன் அவர் மிகுந்த வேலைப்பளுவால், "எனக்கு ஒரு உதவியாளர் வேண்டும்" என்று சிவனை வேண்டியிருந்தார். அந்த வேண்டுதலை நிறைவேற்றும் தருணம் அது.
சிவபெருமான், பார்வதி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்தார். தன் பிராணவாயுவை அதில் ஊதினார். அடுத்த நொடியில் ஓவியம் உயிர் பெற்றது. சிவசக்தியின் அம்சமாக உயிர்பெற்ற அந்த தெய்வீக உருவம், "சித்ரகுப்தன்" எனப் பெயர்பெற்றது. "சித்" - மனம்; "குப்த" - மறைவு. மனதில் மறைந்திருக்கும் எண்ணங்களையும் அறிந்து, பாவ–புண்ணிய கணக்குகளை பதிவு செய்பவர். அதனால் தான் அவர் கையில் ஏடு மற்றும் எழுத்தாணியுடன் பிறந்தவர் என கூறப்படுகிறது.
சித்ரா பௌர்ணமியின் முக்கியத்துவம் :
சூரியன், சந்திரன் இரண்டும் சக்தி பெறும் நாள் சித்ரா பெளர்ணமி. கர்ம கணக்குகள் நினைவூட்டப்படும் நாள். பாவ நிவர்த்திக்கான அரிய சந்தர்ப்பம். இந்த நாளில் திருவண்ணாமலை போன்ற புண்ணிய தலங்களில் கிரிவலம் வருதல், முருகப்பெருமானை வழிபடுதல், தீர்த்த ஸ்நானம் செய்வது இவை அனைத்தும் வாழ்க்கையில் வளம் தரும்.
வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு :
சித்ரா பௌர்ணமி அன்று வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைக்க வேண்டும். பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், குங்குமம் அணிவிக்க வேண்டும். நைவேத்தியமாக பச்சரிசி, வெல்லம், வேப்பம்பூ பச்சடி, பலவகை சாதங்களான தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவை படைத்து வழிபட வேண்டும். ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி, "என் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கட்டும்", "நல்ல வழியில் வாழ வையுங்கள்" என்று மனமாறி வேண்ட வேண்டும்.
விரத முறைகள் :
முழு விரதம் மேற்கொள்வது சிறப்பு. இரவு நிலவு தரிசனம் செய்த பின் உணவருந்த வேண்டும். இது மன கட்டுப்பாட்டையும், பக்தியையும் வளர்க்கும் வழிபாடாகும். சித்ரகுப்தனுக்கு தனிக் கோவில் உள்ள முக்கிய தலமான காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோவில், அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவுண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் போன்ற தலங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. இந்த தலங்களில் சித்ரா பௌர்ணமி அன்று தரிசனம் செய்தால் பாவ நிவர்த்தி, ஆயுள் விருத்தி, மன அமைதி ஆகியவை கிடைக்கும். சித்ரகுப்தருக்கு படைத்த நைவேத்தியத்தை பசித்தோருக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். இதுவே உண்மையான புண்ணியம்.
* லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



